வாதுவை நாய்கள் இறப்பு விவகாரம்: குற்றச்சாட்டுகளை மறுத்து ‘தி ப்ளூ வோட்டர்’ விடுதி விளக்கம்

கொழும்பு: வாதுவை பகுதியில் உள்ள பிரபல ‘தி ப்ளூ வோட்டர்’ விடுதியை சுற்றியுள்ள பகுதியில் நான்கு நாய்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பொலிஸாரும் பொது சுகாதார பரிசோதகர்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி இரவில், விடுதியை சுற்றியுள்ள வீதிகளில் திரிந்த நான்கு நாய்களுக்கு விஷம் வைக்கப்பட்டு, மின்சார வேலி மூலம் மின்சாரம் பாய்ச்சப்பட்டு அநியாயமாகக் கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பலத்த எதிர்ப்பும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

விலங்குகளால் இடையூறு ஏற்படும் பட்சத்தில், அதற்குச் சட்டப்பூர்வமான மற்றும் மனிதநேயமிக்க தீர்வுகள் இருக்கும் நிலையில், இத்தகைய கொடூரமான செயல்கள் நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சுமத்தினர்.

குறிப்பாக, இயற்கை எழில் கொஞ்சும் ஆடம்பர சூழலை வழங்கும் ஒரு சுற்றுலா விடுதி மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

விடுதி நிர்வாகத்தின் மறுப்பு மற்றும் விளக்கம்:

இச்சம்பவம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ‘தி ப்ளூ வோட்டர்’ விடுதி நிர்வாகம், இக்குற்றச்சாட்டுகளை முற்றாக மறுத்துள்ளது:

மின் கசிவே காரணம்: முந்தைய நாள் பெய்த கனமழை காரணமாக, விடுதியின் எல்லைச் சுவருக்கு வெளியே இருந்த முள்வேலியில் தற்செயலாக ஏற்பட்ட மின் கசிவே இந்த விபத்திற்கு காரணம் என்றும், இது திட்டமிட்ட செயலல்ல என்றும் விடுதி தெரிவித்துள்ளது.

சம்பவம் நடந்தது எல்லைக்கு வெளியே: நாய்கள் இறந்த இடம் விடுதியின் எல்லைக்கு வெளியே உள்ள பகுதி என்றும், அந்த நாய்கள் ஒருபோதும் விடுதி வளாகத்திற்குள் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குத் தகவல்: பாதிக்கப்பட்ட விலங்குகளை விடுதியின் ஊழியர்களே முதலில் கண்டறிந்து, உடனடியாக

பொலிஸாருக்கும் பொது சுகாதார பரிசோதகருக்கும் (PHI) தகவல் தெரிவித்தனர்.

விலங்கு நலன் மீதான அர்ப்பணிப்பு: விடுதியின் பொது மேலாளர் உட்படப் பணியாளர்கள் அனைவரும் விலங்கு பிரியர்கள் என்றும், கடந்த 28 ஆண்டுகளாகப் பல நாய்களும் பூனைகளும் விடுதி வளாகத்தில் எவ்வித பாதிப்பும் இன்றி சுதந்திரமாக வாழ்ந்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உண்மைத் தன்மையை அறியாமல் ஆதாரமற்ற வதந்திகளைப் பரப்பி விடுதியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டாம் என்றும், பொலிஸாரின் முழுமையான விசாரணை அறிக்கை வரும் வரை காத்திருக்குமாறும் விடுதி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin