சிறைச்சாலைகளுக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலைமை மற்றும் இரண்டாவது கலவரத்தை கட்டுப்படுத்த தவறியமைக்கு தற்போதைய நீதி அமைச்சரும் அரசாங்கமுமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்றைய நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஆரம்பக்கட்ட சம்பவத்தை முறையாக கையாண்டிருந்தால், திங்கட்கிழமை நிகழ்ந்த பாரிய உயிர்ச்சேதங்களை தடுத்திருக்க முடியும் என சுட்டிக்காட்டிய அவர் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நீதி மற்றும் சட்டத்துறையின் பல்வேறு சீர்திருத்தங்களை அமைச்சர் புறக்கணித்துள்ளதாக விவாதத்தில் தெரிவித்தார்.
மாகாண மட்டங்களில் சட்டமா அதிபர் அலுவலகங்களை நிறுவுதல்,வழக்குத் தாக்கல் செய்வதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்குதல்,சட்டமா அதிபர் திணைக்களத்தின் தாமதங்களை கண்டறிய விசேட நாடாளுமன்ற ஒம்பூட்ஸ்மேனை நியமித்தல், போன்ற எந்தவொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என அஜித் பி. பெரேரா சாடினார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலுக்கு அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் தாமதமே முக்கிய காரணமாகும் எனவும் தற்போது அங்கு வரும் ஒரு மாதிரி அறிக்கையைப் பெற ஒரு வருடத்திற்கும் மேலாகிறது என்றும், இதனால் ஒட்டுமொத்த கட்டமைப்புமே சீர்குலைந்துள்ளதாகவும் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டார்.
மேலும், அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்து முதல் மாதத்திலேயே பிணை வழங்கும் அதிகாரத்தை மீண்டும் மேல் நீதிமன்றத்திற்கு வழங்குமாறு கோரப்பட்ட போதிலும், இரண்டு வருடங்களாகியும் அதற்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சர் தவறியுள்ளார்.
சிறைச்சாலையில் அவசர நிலைமை ஏற்பட்டபோது, விசேட அதிரடிப்படை (STF) அல்லது இராணுவத்தினரை உடனடியாக ஈடுபடுத்தி பாதுகாப்பை உறுதி செய்ய அமைச்சர் தவறிவிட்டார், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பான மாற்று பேச்சுவார்த்தைகளில் மும்முரமாக இருந்த அமைச்சர் உள்ளிட்ட குழுவினர்,
தொலைபேசிகளை கூட நிறுத்தி வைத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இந்த நிலையில் “பொறுப்பை ஏற்பது வேறு, பொறுப்புக் கூறுவது வேறு எனவும் அமைச்சருக்கு வெட்கமும் அச்சமும் இருந்தால் உடனடியாக பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடுநிலையான விசாரணைக்கு இடமளிக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.
இல்லையெனில் ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த அமைச்சரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என அஜித் பி. பெரேரா வலியுறுத்தினார்.

