புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை தடுத்து வைத்து நாட்டுக்கு திருப்பம் பிரான்ஸ்!!

புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை தடுத்து வைத்து நாட்டுக்கு திருப்பம் பிரான்ஸ்!!

புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பிய எல்லையைத் தாண்டி தடுத்துவைக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அகதி அடைக்கல உரிமை மறுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒரு புதிய சட்டச் சீர்திருத்தத்தை நிறைவேற்றியுள்ளது.

பிரான்சின் ஸ்திராஸ்பூர் நகரில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில், இடதுசாரி உறுப்பினர்களின் கடுமையான எதிப்புக்கிடையே இப்புதிய ஒழுங்குமுறைச் சட்டம் பெரும்பான்மை வாக்குகளால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தச் சீர்திருத்தத்தின்படி, தங்களது சொந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ள மறுக்கப்படும் சட்டவிரோதக் குடியேவாசிகளை,

ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளுக்கு வெளியே உள்ள மூன்றாம் நாடொன்றில் ‘திரும்ப அனுப்பும் மையங்கள்’ என்ற பெயரில் தற்காலிகத் தடுப்பு முகாம்களை அமைத்து முடக்கி வைக்க உறுப்பு நாடுகளுக்குச் சட்டப்பூர்வ அனுமதி வழங்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான வாக்கெடுப்பில், இப்புதிய சட்டத்திற்கு ஆதரவாக 418 வாக்குகளும், எதிராக 218 வாக்குகளும் பதிவாகின. முப்பது உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பைப் புறக்கணித்தனர்.

வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளின் பெரும் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்ட முடிவை பிரான்சு அரசாங்கம் உடனடியாக வரவேற்றுள்ளது.

இது குறித்துப் பேசிய பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அமைச்சர் பெஞ்சமின் ஹடாட், நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கும் குடியேற்றத்தை முழுமையாகக் கட்டுப்படுத்துவதற்கும் கிடைத்த ஒரு மாபெரும் முன்னேற்றம் இது என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இப்புதிய சட்டம், கடந்த 2024-ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு, அண்மையில் ஜூன் 12, 2026 அன்று பிரான்சில் நடைமுறைக்கு வந்த ‘குடியேற்றம் மற்றும் அகதிகள் புகலிட ஒப்பந்தத்தின்’ தொடர்ச்சியாக, அகதி உரிமை மறுக்கப்பட்ட வெளிநாட்டினரை ஐரோப்பிய எல்லைகளிலிருந்து உடனடியாக வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சு அரசியல் அரங்கில் வெடித்துள்ள தார்மீகப் பிளவு இருப்பினும், இப்புதிய கடுமையான சட்டம் பிரான்சின் ஆளும் மத்தியக் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளேயே கடுமையான தார்மீகக் கருத்து வேறுபாடுகளையும் தர்மசங்கடங்களையும் தோற்றுவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் நிகழக்கூடும் என்ற அச்சத்தால் ஆளும் ‘ரெனைசன்ஸ்’ கட்சியின் ஒரு பகுதியினர் இச்சட்டத்தை உக்கிரமாக எதிர்த்தனர்.

“குழந்தைகளைக் கொண்ட அகதிகே குடும்பங்களை உலகின் ஏதோ ஒரு கோடியில் உள்ள முகாம்களுக்குத் தூக்கி எறிவது, மனிதநேயத்தின் சிவப்புக் கோட்டைத் தாண்டும் செயல்!” என்று இந்தக் கடைசியில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான

— ஃபாபியன் கெல்லர் குற்றம் சாட்டினார்.

இந்தச் சட்டத்தால் ஏற்பட்ட அரசியல் சங்கடத்தைத் தவிர்க்க, கட்சித் தலைவர் கேப்ரியல் அத்தால் உறுப்பினர்களுக்குத் தங்களின் மனசாட்சிப்படி வாக்களிக்கும் சுதந்திரத்தை வழங்கியிருந்தார்.

அதே நேரத்தில், முன்னாள் பிரதமர் எதுவார் ஃபிலிப்பின் ஆதரவாளர்கள் பிரான்ஸ் எல்லையிலிருந்து குடியேவாசிகளைத் திருப்பி அனுப்புவதில் அரசுக்கு நிலவி வந்த செயலிழந்த தன்மைக்கு இதுவொரு சிறந்த தீர்வு என்று கூறி ஆதரவாக வாக்களித்தனர்.

பழமைவாதக் கட்சியின் பிரான்சுவா-சேவியர் பெல்லாமி இதனை ஒரு வரலாற்றுச் சாதனை என்று வர்ணித்த வேளையில், தீவிர வலதுசாரித் தலைவர் ஜோர்டான் பர்டெல்லா, தங்களது கொள்கை ரீதியான அழுத்தமே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று பெருமிதம் கொண்டார்.

சர்வதேச முகாம்களின் திட்டமும் மனித உரிமை அமைப்புகளின் கவலையும்

மறுபுறம், இடதுசாரி உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் இச்சட்டம் ‘அந்நியர் வெறுப்பை’ மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று கடுமையாகச் சாடி வருகின்றனர். ‘பிரான்ஸ் தெர் தாசில்’ FTDA அமைப்பின் பொது இயக்குநர் வின்சென்ட் போகிராண்ட் கூறுகையில்,
இச்சட்டம் ஒரு குளிர்ந்த வன்முறையாகும் என்றும், அவசரக்கால விதிவிலக்கு நடவடிக்கைகளைச் சாதாரணப் பொதுக் கொள்கைகளாக மாற்றி அகதிகளின் உரிமைகளை ஐரோப்பா நசுக்குகிறது என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, டென்மார்க், ஒஸ்ரியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இத்தகைய தடுப்பு முகாம்களை ருவாண்டா, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்கியுள்ளன.

முன்னதாக, இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி அரசாங்கம் அல்பேனியா நாட்டில் இத்தகையதொரு மையத்தைத் திறந்து சோதனை செய்தது.

ஆனால், அங்கு அகதி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் முன்பே மக்கள் திருப்பி அனுப்பப்பட்டதால் பல்வேறு சட்டப் போராட்டங்களைச் சந்திக்க நேரிட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களில் வெறும் 20 சதவீத நபர்கள் மட்டுமே உண்மையில் திருப்பி அனுப்பப்படும் சூழலில் , இந்த எண்ணிக்கையை அதிரடியாக அதிகரிப்பதே இப்புதிய கடுமையான சட்டத்தின் முதன்மை இலக்காகும்.

Recommended For You

About the Author: admin