பாரிசின் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மீட்கப்பட்ட பெண் ஒருவரின் எலும்புக்கூடு: நான்கு ஆண்டுகளாக உலகிற்குத் தெரியாமல் நீடித்த விசித்திரத் துயரம்!
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிற்குள், பல ஆண்டுகளாக எவருக்கும் தெரியாமல் மறைந்து கிடந்த பெண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாரிசின் 15-ஆவது வட்டாரத்தில் (15e arrondissement), புகழ்பெற்ற மொன்பார்னாஸ் கோபுரத்தின் (Tour Montparnasse) பின்புறம் அமைந்துள்ள ஃபால்கியர் வீதியில் (Rue Falguière) உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள ஒரு அறை இல்லத்தின் (Studio) கதவை யாரோ உடைத்துவிடட நிலையில் அயலவர்கள் அங்கு மனித எலும்புக்கூடு ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நிகழ்விடத்திற்கு விரைந்த புலனாய்வுத் துறையினர் அந்த அடுக்கு மாடியை முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, தடய அறிவியல் சோதனைகளையும் முதற்கட்டக் கள ஆய்வுகளையும் மேற்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்துப் பாரிஸ் அரசுத் தரப்பு வழக்குரைஞர் அலுவலகம் (Parquet de Paris) இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவல்கள் வருமாறு:
“பாரிசின் 15-ஆவது வட்டாரக் குடியிருப்பு ஒன்றிலிருந்து பெண் ஒருவரின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளது உண்மைதான். அந்த இல்லத்திற்குள் சோதனையிட்டபோது 2022-ஆம் ஆண்டைச் சேர்ந்த நாளிதழ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்தப் பெண்ணின் மரணம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2022-ஆம் ஆண்டிலேயே நிகழ்ந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.”
முதற்கட்ட விசாரணையின்படி, அந்த இல்லத்தில் வசித்து வந்த பெண்மணி 1976-ஆம் ஆண்டு பிறந்தவர் (இறக்கும் போது வயது ஏறத்தாழ 46) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பெண்மணி கடுமையான நீரிழிவு நோயினால் (Diabetes) பாதிக்கப்பட்டிருந்தார் என்ற தகவலும் அரசுத் தரப்பால் பகிரப்பட்டுள்ளது.
அவர் கடுமையான நோயின் உக்கிரத்தால் தனியாக இருந்தபோது மரணமடைந்தாரா ?அல்லது இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என்பதைக் கண்டறியத் தற்போது ‘மரணக் காரணத் தேடல் புலனாய்வு’ (Enquête en recherche des causes de la mort) முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
அவரது மருத்துவ ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகளும், இத்தனை ஆண்டுகளாக அவரைத் தேடாமல் கைவிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களைக் கண்டறியும் முயற்சிகளும் தற்பொழுது தீவிரமாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.”அவரது உடலத்திலிருந்து துர்நாற்றம் வீசவில்லையா ? அயலவர்கள் அதை ஏன் உணரவில்லை ? “என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்றுள்ளன

