பாரிஸ் ருவாசி (Roissy) விமான நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்!

தகிக்கும் வெம்மையாலும் திடீர் இடிப்புயலாலும்: பாரிஸ் ருவாசி (Roissy) விமான நிலையத்தில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம்!
பிரான்சை உலுக்கி வரும் கோடையின் உச்சக்கட்ட கொடுவெம்மையலை (Canicule), வான்வழியிலும் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கியுள்ளது.
பொதுவாக அதீத வளிமண்டல வெப்பம் நிலவும் காலங்களில் திடீர் இடிப்புயல்கள் (Orage) வெடிப்பது இயற்கையான ஒன்று. அதன் எதிரொலியாக, நேற்று வியாழக்கிழமை மாலை பாரிஸில் வீசிய திடீர் இடிப்புயல் காரணமாகப் பாரிஸின் முதன்மைப் பன்னாட்டு விமான நிலையமான ‘ருவாசி’ (Roissy – Charles de Gaulle) நோக்கி வந்த அறுபதிற்கும் மேற்பட்ட விமானங்கள் தரை இறங்க முடியாமல் காற்றில் வட்டமடிக்க வேண்டிய சூழல் உருவானது.
நேற்று மாலைப் பொழுது தொடங்கிய வேளையில், பாரிஸ் உள்ளடங்கிய ‘இல்-து-பிரான்ஸ்’ (Île-de-France) பிராந்திய வான்பரப்பைக் கடந்து சென்ற ஒரு தீவிரமான இடி மின்னல் புயல், ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்தையும் தற்காலிகமாக நிலைகுலையச் செய்தது.
பாதுகாப்பான வான்பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், பிரெஞ்சு சிவில் விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (DGAC) வான்வழியில் அவசரக் கட்டுப்பாடுகளையும் ஒழுங்குமுறைகளையும் (Régulations) உடனடியாக அமல்படுத்தியது.
பாரிஸ் விமான நிலையங்கள் (ADP) அமைப்பின் அதிகாரப்பூர்வத் தகவலின்படி:
பாதிக்கப்பட்ட விமானங்கள்: ருவாசி விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த சுமார் 60 பன்னாட்டு விமானங்கள் இந்தத் திடீர் காலநிலைப் மாற்றத்தால் நேரடியாகப் பாதிக்கப்பட்டின.
மோசமான வானிலை காரணமாக இந்த விமானங்கள் அனைத்தும் சராசரியாக 30 நிமிடங்கள் வரை காலதாமதமாகவே தரை இறங்க அனுமதிக்கப்பட்டன.
கடந்த புதன்கிழமை முதல் பிரான்ஸ் தேசத்தை வட்டி வதைத்து வரும் இந்த ஆண்டின் புதிய வெம்மையலை, இடிப்புயல்களுக்கான தகுந்த சூழலை வளிமண்டலத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
இந்த அசாதாரணக் காலநிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை பிரான்சின் சுமார் 50 மாவட்டங்களுக்கு (Départements) வானிலை ஆய்வு மையம் ‘ஒரேஞ்சு நிறக் கொடுவெம்மையலை அவசர எச்சரிக்கை’ விடுத்துள்ளது.
வெப்பத்தின் உக்கிரம் காரணமாகப் புறநகர்த் தொடருந்துகள் நேற்று முடங்கியதைத் தொடர்ந்து, தற்போது வான்வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது பாரிஸ் வாழ் மக்களிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin