“இது எங்கள் ஐரோப்பா அல்ல”

“இது எங்கள் ஐரோப்பா அல்ல”: அகதிகளுக்கு ஐரோப்பாவுக்கு வெளியே முகாம்கள் அமைப்பதற்கு பிரான்ஸ் அரசுத்தலைவர் மக்ரோனும் , ஸ்பெயின் பிரதமர் சான்செஸும் கடும் கண்டனம்!

புரூசெல்ஸ்: ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளை எல்லைகளுக்கு வெளியே உள்ள நாடுகளுக்கு அனுப்பி முடக்கி வைக்கும் ‘நாடுகடத்தல் மையங்கள்’ (Return hubs) திட்டத்திற்குப் பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோனும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸும் தங்களின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இத்தகைய முகாம்கள் ஐரோப்பாவின் அடிப்படை விழுமியங்களுக்கு எதிரானது என்றும், நடைமுறையில் முற்றிலும் பயனற்றது என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

19 நாடுகளின் கூட்டுப் பிரகடனமும் வெடித்த மோதலும் பெல்ஜியம் தலைநகர் புரூசெல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், டென்மார்க் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைமையில் 19 நாட்டுத் தலைவர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய கடுமையான குடியேற்றச் சட்டத்தைப் பயன்படுத்தி, புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிகளை ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள மூன்றாம் நாடுகளுக்கு உடனடியாக அனுப்பி, அங்கு முகாம்களை அமைத்துத் தடுத்து வைப்பதே இவர்களின் திட்டமாகும்.

ஆனால், பிரான்சும் ஸ்பெயினும் இந்த முடிவை தார்மீக ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் முற்றிலுமாக நிராகரித்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பெரும் அரசியல் மோதல் வெடித்துள்ளது.

“மக்களுக்குப் பணம் கொடுத்து அகதிகளைத் தள்ளுகிறார்கள்” – அரசுத்தலைவர் மக்ரோன்
மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மேக்ரோன் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார்:

“எந்த உன்னதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஐரோப்பா கட்டமைக்கப்பட்டதோ, அதற்கு இக்கொள்கை முற்றிலும் எதிரானது. இது எங்கள் ஐரோப்பா அல்ல. இத்தகைய திட்டங்கள் நடைமுறையில் சாத்தியமற்றவை என்பதற்கு இதுவரை உலகில் எங்குமே இத்தகைய மையங்கள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பதே சான்றாகும்.

(இத்தாலி நாடு அல்பேனிய மண்ணில் அமைத்த முகாம்கள் இலக்குகளை எட்டத் தவறியதை அவர் இங்கு மறைமுகமாகக் குறிப்பிட்டார்).”

“மனித உரிமைகளிலும் அறநெறிகளிலும் ‘புதுமை’ என்ற பெயரில் சமரசம் செய்துகொள்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பாத அல்லது திரும்ப முடியாத மக்களை, பணத்தைக் கொடுத்து ஏதோ ஒரு மூன்றாம் நாட்டிற்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளுவதே இந்த முகாம்களின் உண்மையான பின்னணியாகும்.

இத்தகைய முகாம்களை அமைக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பயன்படுத்தப்படுவதை பிரான்ஸ் ஒருபோதும் அனுமதிக்காது.” என்று பிரான்ஸ் அரசுத்தலைவர் இம்மானுவேல் மக் ரோன் திட்டவட்டமாகத் தெரிவித்தார் .

“இது ஒரு வெற்று மாயை” – ஸ்பெயின் பிரதமர் சான்செஸ்

இத்திட்டத்தைக் கடுமையாகச் சாடிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், இந்த நாடுகடத்தல் முகாம்கள் குடியேற்றப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது என்றும், இது ஒரு “வெற்று மாயை” என்றும் வர்ணித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் விலைமதிப்பற்ற பொருளாதார வளங்களை வீணடிக்கும் செயலற்ற நடவடிக்கை இது என்று குறிப்பிட்ட அவர், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட அகதிகள் புறப்படும் மற்றும் கடந்து வரும் நாடுகளுடன் நாம் கொண்டுள்ள நட்புறவையும், பரஸ்பர கூட்டுழைப்பையும் இது தார்மீக ரீதியாகக் சிதைத்துவிடும் என்று எச்சரித்தார்.

“ஆப்பிரிக்கக் கண்டத்தின் வளர்ச்சி முதலீடுகளுக்காகப் பயன்படுத்த வேண்டிய நிதியை, அங்கேயே நாடுகடத்தல் முகாம்களைக் கட்டுவதற்காகப் பயன்படுத்துவோம் என்று நாம் எப்படி விளக்க முடியும்? நாம் எந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இக்கொள்கைகளால் சர்வதேச அரங்கில் நமது நம்பகத்தன்மை முற்றிலும் குலைந்துவிடும்” என்று மக்ரோனும் சான்செஸும் ஒருசேரக் கவலை தெரிவித்துள்ளனர். See less

Recommended For You

About the Author: admin