இரண்டாம் உலகப்போரில் மிக உக்கிரமான எதிரிகளாகப் போரிட்ட ஜெர்மனியும் அமெரிக்காவும், போர் முடிந்தவுடன் தங்களின் பகையை மறந்து கைகோர்த்தன

இரண்டாம் உலகப்போரில் மிக உக்கிரமான எதிரிகளாகப் போரிட்ட ஜெர்மனியும் அமெரிக்காவும், போர் முடிந்தவுடன் தங்களின் பகையை மறந்து கைகோர்த்தன.

அதன் விளைவுதான், இன்று உலகப் பொருளாதாரத்தில் நான்காவது பெரிய வல்லரசாக ஜெர்மனி நிமிர்ந்து நிற்கிறது.
அமெரிக்காவின் Pearl Harbour மீது ஜப்பான் குண்டுவீசியது; பதிலுக்கு அமெரிக்கா ஜப்பான் மீது அணுகுண்டுகளை வீசிப் பேரழிவை ஏற்படுத்தியது.

ஆனால், அந்தப் பகையையெல்லாம் கடந்து இன்று அவர்கள் நண்பர்களாக இணைந்ததால்தான், Automobile மற்றும் Electronics துறையில் ஜப்பான் உலகையே ஆட்டிப்படைக்கிறது.

வரலாறு நமக்குக் கற்றுத்தரும் பாடம் இதுதான்:

“பகைமையைத் தொடர்வது அழிவுக்கே வழிவகுக்கும், அதைத் தாண்டி நட்போடு சிந்திப்பதே ஒரு தேசத்தின் உயர்வுக்குக் காரணம்.”

ஆனால், போரைப்பற்றி எந்த ஒரு துளி அறிவோ, நாட்டின் பொருளாதாரச் சீரழிவு பற்றிய எந்தப் புரிதலோ இல்லாத இன்றைய தமிழ் – சிங்கள “Gen-Z தற்குறிகள்” சமூகவலைத்தளங்களில் இன்னும் “Ha Ha” ஸ்மைலிகளைப் போட்டுக்கொண்டு, போலிப் பெருமைகளுடன் இணையப்போர் (Cyber War) நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நிதர்சனம் என்ன தெரியுமா? 2009-க்கு முன்னர் போர்க்களத்தில் நேருக்கு நேர் கொடூரமாக மோதிக்கொண்ட, ஒருகாலத்தில் புலிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய ‘ஜெயந்தன் படையணி’ முன்னாள் போராளிகளும், இலங்கை ராணுவத்தின் ‘சிங்க ரெஜிமண்ட்’ முன்னாள் வீரர்களும் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யக் காடுகளின் பனிப்பொழிவுக்கு நடுவே தோளோடு தோள் நின்று சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தங்களின் கடந்தகாலப் பகையை மறந்து, வீழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்திற்குச் சிறிதளவேனும் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் நோக்கில் அங்கே அவர்கள் தங்களின் உயிர்களைப் பணையம் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

2014-இல் தொடங்கிய உக்ரைன் போர், தற்காலத்தில் பெரும் மனிதவளப் பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, ரஷ்யாவும் உக்ரைனும் வெளிநாட்டு வீரர்களைத் தங்கள் படைகளில் சேர்க்கத் தொடங்கின.

இலங்கையில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்ட மனிதக் கடத்தல் கும்பல்களும், சமூகவலைத்தள விளம்பரங்களும் முன்னாள் இலங்கை ராணுவ மற்றும் விடுதலைப் புலிகளின் வீரர்களைக் குறிவைத்தன.

சமையல்காரர், ஓட்டுநர், அல்லது பாதுகாப்புப் பணி போன்ற “ஆபத்தில்லாத” வேலைகள் என்று நம்பியே பெரும்பாலான வீரர்கள் அங்கே அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்காக லட்சக்கணக்கில் பணத்தைச் செலுத்திவிட்டுச் சென்ற வீரர்கள், மாஸ்கோவிலும் உக்ரைன் எல்லைகளிலும் இறங்கிய உடனே கொடூரமான முன்னணிப் போர்க்களத்திற்கு (Frontlines) பலவந்தமாகத் தள்ளப்பட்டனர்.

புள்ளிவிவரங்கள் காட்டும் அதிர்ச்சி உண்மை:

நாடாளுமன்ற விசாரணைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தகவல்படி, சுமார் 2,000 இலங்கை முன்னாள் வீரர்கள் இந்தப் போரில் கூலிப்படையாக இணைந்துள்ளனர்.

ரஷ்ய ராணுவத்தில் மட்டும் 554 இலங்கையர்கள் இணைந்திருப்பதாக அரசு கூறினாலும், இதுவரை குறைந்தது 275-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் ரஷ்யப் பகுதியில் பலியாகியுள்ளனர் என உக்ரைனின் கைதிகள் நல அமைப்பும், OCCRP அமைப்பும் உறுதிப்படுத்தியுள்ளன. 120-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

முன்னாள் போராளிகளும் வீரர்களும் ஏன் மீண்டும் ஒரு போர்க்களத்தை நாடிச் செல்ல வேண்டும்?
இதற்குப் பொருளாதாரக் காரணி மட்டுமே காரணமல்ல.

முப்பது வருட கால ஈழப் போரில் பங்கேற்ற பல வீரர்களுக்கு, அமைதியான சாதாரண வாழ்க்கை என்பது பழகாத ஒன்றாக, சலிப்பானதாக மாறிவிடுகிறது.

உளவியல் ரீதியாக இதற்கு “Trauma Reenactment “(அதிர்ச்சியை மீண்டும் வாழ்தல்) என்று பெயர்.

போரின் வடுக்கள், குற்ற உணர்ச்சி (Survivor’s Guilt) ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட வீரர்களுக்கு, அமைதியான சூழலை விட போர்க்களத்தின் ஆபத்தான, கணிக்க முடியாத சூழலே பழகிய இடமாகத் தோன்றுகிறது.

இந்த உளவியல் பலவீனமே, அவர்களைத் தங்களுக்குச் சம்மந்தமில்லாத ஒரு நாட்டின் போரில், தங்களின் பழைய எதிரிகளுடனேயே கைகோர்த்துச் சண்டை போட வைத்திருக்கிறது.

இலங்கை ராணுவத்தின் ‘சிங்க’ பிரிகேட் மற்றும் சிறப்புப் படையணியில் (Special Forces) பணியாற்றி, வடக்கே புலிகளுக்கு எதிராகப் போரிட்ட ‘சார்ஜென்ட் GK’ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் நேரடி அனுபவம் நவீன போரின் கோர முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

ஓய்வுக்குப் பின் வறுமையினாலும், சாதாரண வாழ்க்கையின் சலிப்பினாலும் பாதிக்கப்பட்ட இவர், 7.5 லட்சம் இலங்கை ரூபாயைக் கொடுத்து ரஷ்யா சென்றார்.

மாதம் 2,00,000 ரூபிள் (சுமார் 2,748 டாலர்) சம்பளம் என்ற வாக்குறுதியுடன் சென்றவருக்கு வெறும் 14 நாட்கள் மட்டுமே போர்ப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பங்களாதேஷ், இந்தியா, ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பலதரப்பட்ட மனிதர்களுடன் அவர் உக்ரைன் எல்லைக்கு அனுப்பப்பட்டார்.

ஈழப் போரில் பதுங்கு குழிகளைத் தாக்கிய அனுபவம் கொண்ட GK-க்கு, உக்ரைன் போர் முற்றிலும் புதியதாக இருந்தது. அங்கே ஆறு குண்டுகளைத் சுமந்து வரும் ட்ரோன்களின் (Drones) தாக்குதலே பிரதானமாக இருந்தது.
“ஈழப் போரில் நமக்குக் காயம் ஏற்பட்டால் நம் தோழர்கள் நம்மைக் காப்பார்கள், இறந்தால் உடலையாவது மீட்பார்கள் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் உக்ரைனில், காயம் அடைந்தவர்களைக் காப்பாற்ற யாரும் வருவதில்லை; இறந்தவர்களின் உடல்கள் காடுகளிலேயே அழுகிப் போகின்றன.

காடுகளில் நடக்கும்போது மனித எலும்புக்கூடுகளின் மீதுதான் மிதிக்க வேண்டியிருந்தது” என அவர் விவரிக்கிறார்.
ரஷ்ய அதிகாரிகளுக்கும் இவர்களுக்கும் இடையே இருந்த மொழித் தடை, போர்க்களத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

எப்போது, எங்கிருந்து உத்தரவு வரும் என்று தெரியாமல், தலைவர்கள் யாரும் முன்னின்று வழிநடத்தாமல், மரண பயத்துடனேயே ஒவ்வொரு நாளும் கழிந்தது.

பசி, பற்றாக்குறை, மரண பயம் ஆகியவற்றுக்கு மத்தியிலும், அங்கு சேர்ந்திருந்த இலங்கையர்கள் (சிங்களவர்களும் தமிழர்களும்) தங்களின் தாய்நாட்டு நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்டனர்.

போரின் இரைச்சலுக்கு நடுவே, கரண்டிகளையும் பாத்திரங்களையும் மேளமாக மாற்றி, தங்களின் பாரம்பரியப் பாடல்களைப் பாடி, நடனமாடி மகிழ்ந்த தருணங்கள், அவர்களுக்குள் இருந்த மனிதநேயத்தையும், போரின் அவலத்தையும் ஒருசேரக் காட்டியது.

பத்து மாத கால நரக வேதனைக்குப் பிறகு, குடும்பச் சூழல் காரணமாகப் பெரும் போராட்டத்தின் மத்தியில் விலகல் கடிதம் பெற்று, மாஸ்கோ வழியாக கொழும்பு திரும்பியுள்ளார் அந்த சார்ஜென்ட்.

வரலாற்றில் ஜெர்மனியும், ஜப்பானும் தங்களின் எதிரிகளுடன் இணங்கிப் போய் இன்று உலகை ஆளும் வல்லரசுகளாக மாறியுள்ளன.

அங்கே, உக்ரைன் காடுகளில் ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த தமிழ் மறவர்களும், சிங்கள ராணுவ வீரர்களும் இன்று வறுமையின் கோரப் பிடியால் ஒன்றாகக் கைகோர்த்து மரணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மரணத்தின் விளிம்பில் நிற்கும் அந்த வீரர்களுக்குத் தெரிந்த ஒற்றுமையின் ரகசியம், முகநூலில் “Ha Ha” ஸ்மைலி போட்டுச் சண்டைபிடிக்கும் இந்தத் தற்குறித் தலைமுறைக்கு இன்னும் புரியவில்லை.

இனிமேலும் நாம் கடந்தகாலப் பகையையும், இந்த இனங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வையும் சுமந்து கொண்டு திரிந்தால், நம் தேசம் இன்னும் பல தலைமுறைகளுக்கு வறுமையிலும் நரகத்திலும்தான் உழல வேண்டியிருக்கும்.

இணையத்தில் போலிப் பெருமை பேசுவதை முற்றிலுமாகப் புறம் தள்ளிவிட்டு, நாட்டை எப்படி முன்னேற்றலாம் என்று சிந்திப்பதே இன்றைய அவசரத் தேவை.

இனவாதப் பிரிவினைகளைக் கடந்து, பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் நாம் ஒருமித்த தேசமாக ஒன்றிணைய வேண்டும்.

அந்த ஒற்றுமையின் வழியே ஒன்றிணைந்து பயணித்தால் மட்டுமே இலங்கை என்கிற தேசம் உலக அரங்கில் நிமிர்ந்து நிற்க முடியும்.

இனியும் பிரிந்து நின்று அழிவதா, அல்லது பகை மறந்து இணைந்து வாழ்வதா? முடிவை இளைய தலைமுறைதான் எடுக்க வேண்டும்!

Recommended For You

About the Author: admin