ஐ.நா. பாதுகாப்பு அவைத் தேர்தலில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி

ஐ.நா. பாதுகாப்பு அவைத் தேர்தலில் ஜெர்மனிக்கு அதிர்ச்சித் தோல்வி: முதல்முறையாக நேர்ந்த ‘கசப்பான’ பின்னடைவு!

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதற்கான தேர்தலில், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி வரலாற்றில் முதல்முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. 2027 மற்றும் 2028-ஆம் ஆண்டுகளுக்கான தற்காலிக உறுப்பு நாடுகள் தேர்தலில், மேற்கு ஐரோப்பியப் பிரிவில் உள்ள இரண்டு இடங்களுக்குப் போர்ச்சுகல் மற்றும் ஒஸ்ரியா ஆகிய நாடுகள் அபார வெற்றி பெற்று சர்வதேச அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

 

ஐ.நா. பாதுகாப்பு அவையில் இதுவரை ஆறு முறை அங்கம் வகித்துள்ள ஜெர்மனி, தான் போட்டியிட்ட தேர்தலில் தோல்வியடைவது இதுவே முதல்முறையாகும். இந்த எதிர்பாராத முடிவுகள் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஹான் வாடேபுல் (Johann Wadephul), இது தங்களுக்குக் கிடைத்த மிகக் கசப்பான தோல்வி என்றும், உண்மையான ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தனது வேதனையைப் பதிவு செய்தார். தங்களின் இந்தத் தோல்விக்குப் பின்னணியில் உள்ள சர்வதேச அரசியல் நிலைப்பாடுகளையும் அவர் வெளிப்படையாகச் சுட்டிக்காட்டினார்.

 

“உக்ரைனுக்கு நாங்கள் தொடர்ந்து வழங்கி வரும் அசைக்க முடியாத ஆதரவே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். பாதுகாப்பு அவையில் எங்களின் குரல் ஒலிப்பதை ரஷ்யா துளியும் விரும்பவில்லை என்பதும், எங்களுக்கு எதிராக அவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்கள் என்பதும் எவருக்கும் ரகசியமல்ல” என அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

 

இரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற இத்தேர்தலில், வெற்றிக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் போர்ச்சுகல் (134 வாக்குகள்) மற்றும் ஒஸ்ரியா(131 வாக்குகள்) ஆகிய நாடுகள் முதல் சுற்றிலேயே எளிதாகப் பெற்றுத் தங்களின் இடங்களை உறுதி செய்தன. ஆனால், ஜெர்மனியால் 104 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பகுப்பாய்வு செய்துள்ள சர்வதேச நெருக்கடிக் குழுவின் (International Crisis Group) ஆய்வாளர் டேனியல் ஃபோர்டி, ஒஸ்ரியாவின் நீண்டகாலத் திட்டமிடலே அதன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்.

 

ஒஸ்ரியா கடந்த பத்து ஆண்டுகளாகவே ‘சிறிய நாடுகளின்’ உரிமைகளை முன்னிறுத்தித் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில், ஜெர்மனி மிகவும் தாமதமாகவே தேர்தல் களத்தில் குதித்ததே இந்தத் தோல்விக்குப் பெரும் காரணமாக அமைந்தது. மேலும், ஒரே நேரத்தில் ஜெர்மனி மற்றும் ஒஸ்ரியா ஆகிய ஒத்த கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட இரண்டு நாடுகள் பாதுகாப்பு அவையில் இடம்பெறுவதைப் பல உறுப்பு நாடுகள் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாபெரும் ராஜதந்திர வெற்றியை ஒஸ்ரியா அதிபர் கிறிஸ்டியன் ஸ்டோக்கர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

 

மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர்த்து, ஆப்பிரிக்கப் பிராந்தியத்துக்கான இடத்திற்குத் தனித்துப் போட்டியிட்ட ஜிம்பாப்வே நாடும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்துக்கான இடத்திற்கு டிரினிடாட் மற்றும் டொபாகோ நாடும் முதல் சுற்றிலேயே அமோக வெற்றி பெற்றன. ஆசியப் பிராந்தியத்துக்கான கடும் போட்டியில், நான்கு சுற்றுகள் வரை நீண்ட விறுவிறுப்பான வாக்கெடுப்பின் முடிவில் பிலிப்பைன்ஸ் நாட்டை வீழ்த்திக் கிர்கிஸ்தான் வெற்றிவாகை சூடியுள்ளது.

 

ஐக்கிய நாடுகள் சபையின் பட்ஜெட்டிற்கு அதிக நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றாகவும், ஜி-7 (G7) அமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும் வல்லரசாகவும் உள்ள ஜெர்மனிக்கு இந்தத் தேர்தல் முடிவு ஒரு சறுக்கலாக அமைந்தாலும், சர்வதேச அரங்கில் அதன் குரல் தொடர்ந்து ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஐந்து நாடுகளும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று தங்களின் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்கவுள்ளன.

Recommended For You

About the Author: admin