ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததா?

ஈரான் போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்ததா? பேச்சுவார்த்தையை நாடும் வாஷிங்டன். முன்னாள் அமெரிக்க கடற்படை தளபதியின் கருத்து எழுப்பும் கேள்விகள் என்ன?
ஈரான்–அமெரிக்கா மோதல் கடந்த சில மாதங்களாக உலக அரசியலின் மிக முக்கியமான விவகாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இராணுவ நடவடிக்கைகள், பொருளாதார தடைகள், ஹோர்முஸ் நீரிணையை மையமாகக் கொண்ட பதற்றம் ஆகியவை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த சூழலில், அமெரிக்காவின் முன்னாள் கடற்படை தளபதிகளில் ஒருவரின் கருத்து ஊடகங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
அந்தக் கருத்தின் சாரம் என்னவெனில், ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இராணுவ தாக்குதல்களும் அழுத்தங்களும் அவர்கள் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. இதனால் இறுதியில் அமெரிக்கா பேச்சுவார்த்தை மேசையை நாட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என்பதாகும்.
இதேபோல், சில முன்னாள் அமெரிக்க இராணுவ அதிகாரிகள் பலரும் கடந்த மாதங்களில் நீண்டகால போர் ஒன்று நடத்தப்பட்டால் அது அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை உண்டாக்கும் என்றும், இந்த போரை நடத்துவதால் அமெரிக்கா பல பேரிழப்புகளை காண நேரிடும் என்றும் கூறி இருந்தார்கள். ஆகவே இறுதியில் அரசியல் தீர்வே முக்கியம் பெறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடுநிலை நாடுகளின் முயற்சியுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக பல சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது, இராணுவ நடவடிக்கைகளுடன் இணைந்தே இராஜதந்திர முயற்சிகளும் தொடர்கின்றன என்பதைக் காட்டுகிறது.
இதனை சில அரசியல் ஆய்வாளர்கள், “ஒரு தரப்பின் முழுமையான வெற்றி அல்லது தோல்வி” என்று அல்லாமல், இரு தரப்பும் நீண்டகால மோதலின் செலவுகளைம் உலகலாவிய பொருளாதார வீழ்ச்சியையும் உணர்ந்து பேச்சுவார்த்தைக்கு நகரும் கட்டமாகப் பார்க்கின்றனர்.
மறுபுறம், ஈரான் தொடர்ந்து தனது நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாமல் எந்த இறுதி ஒப்பந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபட முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.
எனவே, “அமெரிக்கா தோல்வியடைந்து ஈரானிடம் கெஞ்சுகிறது” என்ற கூற்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் மறுத்த போதிலும் மோதலுக்குப் பிறகு அமெரிக்கா மீண்டும் பேச்சுவார்த்தையை முன்னிறுத்துவது அவர்களின் தோல்வியின் அடையாளம் என்பதையே காட்டுகிறது.
இந்த வீழ்ச்சியின் தாக்கம் தான் இராணுவ நடவடிக்கைகளால் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்பதை வெளிப்படுத்துவதாக பல பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள புதிய அதிகாரச் சமநிலை, ஹோர்முஸ் நீரிணையின் முக்கியத்துவம், உலக எரிசக்தி சந்தையின் அழுத்தம் மற்றும் சர்வதேச இராஜதந்திரம் ஆகிய அனைத்தும் இணைந்து தான், இந்த மோதலின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கப் போகின்றன.
அதனால், எதிர்காலத்தில் ஆயுத மோதல்களைவிட பேச்சுவார்த்தைகளுக்ளே அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
அதேவேளை ஈரானின் புதிய உச்ச தலைவர் முஜ்தபா கமைனி அவர்கள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இனி பேச்சுவார்த்தை குறித்த சாதகமான பதில்கள் ஈரான் தரப்பில் இருந்து கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்பதையே தெளிவாக புலப்படுத்துகிறது.
சூடான போர் பதற்றம் ஒரு புறம் வாதாடும் பேச்சுகள் மறுபுறம் என பெரும் சிக்கலில் சிக்கித் தவிக்கும் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் வரும் நாட்களில் என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Recommended For You

About the Author: admin