இலங்கையில் முதற்தடவையாக வடக்கு மாகாணத்தில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (OSSI) டிஜிட்டல் தளம் அறிமுகம்!

இலங்கையில் முதற்தடவையாக வடக்கு மாகாணத்தில் ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (OSSI) டிஜிட்டல் தளம் அறிமுகம்!

முதலீட்டாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த நிர்வாக ரீதியான சவால்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இலங்கையிலேயே முதன்முறையாக ‘ஒருவழி முதலீட்டு நுழைவாயில்’ (One-Stop Investment Portal – OSSI) எனும் டிஜிட்டல் தளம் வடக்கு மாகாணத்தில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த முன்னோடி டிஜிட்டல் செயற்றிட்டத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் இன்று செவ்வாய்க்கிழமை (2026 மே 26) ஆரம்பித்து வைத்தார். திணைக்களங்களின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் காலதாமதங்கள் மற்றும் நீண்ட பொறிமுறைகளால் முதலீட்டாளர்கள் கடந்த காலங்களில் பெரும் விரக்தியை எதிர்கொண்டிருந்தனர்.

இத்தகைய நிர்வாகத் தடைகளை நீக்கி, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய முதலீட்டுச் சூழலை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கமாகும்.
‘மாற்றத்தின் அடையாளம்’

நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், இந்த நுழைவாயிலானது வெறும் டிஜிட்டல் தளம் மாத்திரமன்றி, மாகாண பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும் மாற்றத்தின் அடையாளமாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், “நாம் இங்கு ஆரம்பித்து வைக்கும் மாகாண மாதிரியானது, இலங்கை முழுவதுக்குமான ஒரு தேசியக் கட்டமைப்புக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது.

இதன்மூலம் உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் வடக்கு மாகாணத்தை நோக்கித் தமது முதலீடுகளைக் கொண்டுவர மிக இலகுவாக அணுகமுடியும்,” என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க செயற்றிட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த ஒற்றைச் சாளர முறைமையின் (Single Window System) மூலம் முதலீட்டுப் பதிவுகள், அனுமதிகள் மற்றும் ஆவணச் சரிபார்ப்புகள் அனைத்தும் ஒரே தளத்தில் டிஜிட்டல் மயமாக்கப்படுவதால், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் வடக்கு மாகாணத்திற்கு மிக வேகமாக ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin