பெண்களாக மாறி போதைப்பொருள் கடத்தல்காரரை மடக்கிய தாய்லாந்து காவற்துறையினர்: வைரலாகும் வினோத அதிரடி நடவடிக்கை!
தாய்லாந்தில் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பிடிப்பதற்காக, அந்நாட்டு காவற்துறையினர் பெண்களைப் போல ஒப்பனை செய்து, நடனக் குழுவினராக மாறி நடத்திய அதிரடி சோதனை வெற்றி பெற்றுள்ளது. தாய்லாந்தின் லோப்புரி (Lopburi) மாகாணத்தில் உள்ள தா லுவாங் (Tha Luang) மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இப்பகுதியில் மெத்தம்பேட்டமைன் (Methamphetamine) எனும் ஆபத்தான போதைப்பொருள் விற்பனை மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மேகா ஃபா-வாப்-வாப் (Mekha Fa-wap-wap) என்ற சந்தேக நபரைக் காவற்துறையினர் நீண்ட நாட்களாகக் கண்காணித்து வந்தனர். சாதாரண உடையில் சென்றால் அவர் தப்பிவிடக்கூடும் என்பதால், காவற்துறையினர் ஒரு வினோதமான திட்டத்தைத் தீட்டினர்.
அங்கு நடைபெற்ற உள்ளூர் வீதி நடனத் திருவிழாக் கூட்டத்தைப் பயன்படுத்தி, ஐந்து ஆண் காவற்துறை அதிகாரிகள் பளபளப்பான கவர்ச்சி உடைகள், விக்குகள் (Wigs) மற்றும் அடர்ந்த முக ஒப்பனையுடன் பெண்களைப் போலத் தங்களை மாற்றிக்கொண்டனர். அவர்களுடன் ஒரு பெண் அதிகாரியும் இணைந்திருந்தார்.
விழா மேடைக் கலைஞர்கள் போலக் கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்து, சந்தேக நபருக்கு மிக அருகில் சென்ற காவற்துறையினர், சரியான தருணத்தில் அவரைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
இந்த அதிரடி சோதனையின் போது சந்தேக நபரிடமிருந்து 53 மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் மாத்திரைகள், போதைப்பொருள் விநியோகத்திற்குப் பயன்படுத்தப்படும் 200 இற்கும் மேற்பட்ட சிறிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் ஒரு கைபேசி ஆகியன காவற்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட காவலர்கள் தங்களின் பெண் வேட உடைகளுடனேயே குற்றவாளி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட சான்றுகளுடன் காவல் நிலையத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி, ஹாலிவுட் நகைச்சுவைப் படக் காட்சிகளைப் போல இருப்பதாக உலகளவில் பெரும் வைரலாகி வருகின்றன

