யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க நடவடிக்கை: பாதுகாப்பு பிரதி அமைச்சரிடம் மாவட்ட செயலர் கோரிக்கை!
யாழ்ப்பாணம் பலாலி கிழக்கு பகுதியில் கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் தனியார் வசமுள்ள காணிகளை முதற்கட்டமாக விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலர் ம.பிரதீபன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவிடம் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கள விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர, பலாலி கிழக்கில் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்தார். இக்கள ஆய்வின் போதே மாவட்ட செயலரால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் இருந்த காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மாவட்ட செயலர், எஞ்சிய பலாலி கிழக்குக் காணிகளையும் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இக்கோரிக்கையை அடுத்து, பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து விரிவாகக் கலந்துரையாடி சாதகமான முடிவு எட்டப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மேலும், 1986 ஆம் ஆண்டு பலாலி விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளுக்கு இதுவரை எவ்வித நட்டஈடும் வழங்கப்படவில்லை என்பதை மாவட்ட செயலர் சுட்டிக்காட்டிய போது, இது குறித்து கொழும்பில் தனியான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி தீர்வு காண்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இவற்றுடன், பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களில் மக்கள் தடையின்றி வழிபடுவதற்கான ஏற்பாடுகளையும், வேலுப்பிள்ளை வித்தியாலயத்தின் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பாதுகாப்புப் பிரதி அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
மக்களின் காணிகள் மக்களுக்கே; விரைவில் பெருமளவு காணிகள் விடுவிப்பு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளிப்பு!
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான பொதுமக்களின் காணிகளை மிக விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் செயலகத்தில் காணி விடுவிப்புத் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“மக்களின் காணி மக்களுக்கே என்பதே எமது அரசாங்கத்தின் கொள்கையும் நோக்கமுமாகும்” எனத் தெரிவித்த அமைச்சர், காணிகளை விடுவிக்கும் நோக்குடன் உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறினார். முதற்கட்டமாக உடனடியாக விடுவிக்கப்படக் கூடிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைக் காணிகளை முழுமையாக விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், உயர்பாதுகாப்பு வலயத்தினுள் முடக்கப்பட்டுள்ள பிரதான வீதிகளின் பகுதிகளை விடுவித்து, போக்குவரத்தைச் சீர்செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக விடுவிக்க முடியாத காணிகள் குறித்து, காணி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காகத் துல்லியமாக எத்தனை ஏக்கர் காணிகள் தேவை என்பது குறித்து தற்பொழுது ஆராயப்பட்டு வருவதாகவும், விவசாயக் காணிகளை விடுவிப்பதற்காக விவசாயத் திணைக்களத்திடம் தரவுகள் கோரப்பட்டுள்ளதாகவும், அத் தரவுகள் கிடைத்தவுடன் விவசாயக் காணிகளும் விடுவிக்கப்படும் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்தார்.


