பாரிஸ் மழலையர் பராமரிப்பு மைய ஊழல்: செயிண்ட்-டொமினிக் பள்ளியில் (Saint-Dominique) 16 பேர் அதிரடிக் கைது!
(Scandale du périscolaire à Paris)
பாரிஸில் பள்ளிக்குப் பிந்தைய நேரப் பராமரிப்பு மையங்களில் (périscolaire) குழந்தைகளுக்கு எதிராக நடந்த வன்கொடுமை ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இன்று புதன்கிழமை காலை, சிறார் பாதுகாப்புப் படையின் (Brigade de protection des mineurs) புலனாய்வாளர்கள் பாரிஸின் 7-வது வட்டத்தில் (VIIe) உள்ள செயிண்ட்-டொமினிக் (Saint-Dominique) பள்ளியில் அதிரடி வேட்டை நடத்தி 16 பேரைக் கைது செய்துள்ளனர்.
பாரிஸ் அரசுத் தரப்பு வழக்கறிஞர் (Procureure de Paris) லார் பெக்யூ (Laure Beccuau) சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்களின் தொடர்ச்சியாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாரிஸில் உள்ள 84 மழலையர் பள்ளிகள் (écoles maternelles) மற்றும் சுமார் 20 தொடக்கப் பள்ளிகளில் (écoles élémentaires) பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கடந்த வாரம், 11-வது வட்டத்தில் உள்ள புல்லூர்ட் (Bullourde) பள்ளியைச் சேர்ந்த பராமரிப்பாளர் (animateur) ஒருவர் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது. இவர் ஏற்கனவே 2024-ல் 10-வது வட்டப் பள்ளி ஒன்றில் இதேபோன்ற வழக்கில் சிக்கி, பின்னர் வழக்கு முடித்து வைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறார் பாதுகாப்புப் படையினர் பல மாதங்களாக நடத்தி வந்த ரகசிய விசாரணை தற்போது ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் Cash Investigation) ஆவணப்படத்தில் சர்ச்சைக்குள்ளான செயிண்ட்-டொமினிக் பள்ளியைச் சேர்ந்த 16 பேர் இன்று அதிகாலை அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரின் மீதும் குழந்தைகளுக்கு எதிரான “பல்வேறு வகையான மற்றும் தீவிரத்தன்மை கொண்ட” குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இவர்களில் பலர் ஏற்கனவே பணியிடை நீக்கம் (suspendues) செய்யப்பட்டவர்கள் என அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த விசாரணைகளின் விரைவான முன்னேற்றத்தைப் பாரிஸ் நகரமுதல்வர் இம்மானுவேல் கிரிகுவா (Emmanuel Grégoire) தரப்பு பெரிதும் வரவேற்றுள்ளது. 2025 இலையுதிர்காலத்தில் நகரமுதல்வராக பதவியேற்றது முதல் இந்த விவகாரத்தில் அவர் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட விரும்புகிறார். அவர் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தரவுகள்:
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 78 பராமரிப்பாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்; இவர்களில் 31 பேர் மீது பாலியல் வன்கொடுமை தொடர்பான நேரடிச் சந்தேகங்கள் உள்ளன.
கடந்த ஆண்டில் சுமார் 40 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; அதில் 20 பேர் பாலியல் வன்கொடுமைக்காக நீக்கப்பட்டவர்கள்.
ஐந்து பராமரிப்பாளர்கள் மீது பாரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் (tribunal correctionnel) வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் அறிவித்துள்ளார். குறிப்பாக, இந்த ஒட்டுமொத்தப் பூகம்பத்திற்கும் தொடக்கப்புள்ளியாக இருந்த அல்போன்ஸ்-போடின் (Alphonse-Baudin) பள்ளியின் பராமரிப்பாளர் டேவிட் ஜி. (David G) என்பவருக்கான முக்கிய வழக்கு விசாரணை வருகிற மே 26, செவ்வாய்க்கிழமையன்று நடைபெறவுள்ளது.

