துலோன் (Toulon) சோகம்: 13-வது மாடியிலிருந்து குழந்தைகளுடன் குதித்துத் தாய் தற்கொலை – 3 குழந்தைகள் பலி!
பிரான்சின் துலோன் (Toulon) நகரில் உள்ள பான்ட்காரல் குடியிருப்பில் (Cité Pontcarral) இன்று புதன்கிழமை (மே 20) அதிகாலை மனதை உலுக்கும் ஒரு மாபெரும் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 13-வது மாடியிலிருந்து கீழே விழுந்து ஒரு தாயும் அவரது மூன்று குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கு முன்பாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களும் (Pompiers) அவசர மருத்துவக் குழுவினரும் (Samu), ஏ-பிளாக்கின் (bâtiment A) கீழே கிடந்த குழந்தைகளுக்கு முதலுதவி அளித்துக் காப்பாற்றத் தீவிரமாக முயன்றனர்.
காவல்துறை வட்டாரங்களிலிருந்து ‘ஐசிஐ ப்ரோவென்ஸ்’ (ICI Provence) பெற்றுள்ள முதற்கட்டத் தகவல்களின்படி, குடும்பத்தலைவியான அந்தத் தாய் தனது மூன்று குழந்தைகளுடன் (இரண்டு சிறுவர்கள், ஒரு சிறுமி) 13-வது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளது தெரியவந்துள்ளது.
விசாரணையில் கிடைத்துள்ள அதிர்ச்சியூட்டும் தகவலின்படி, அதிகாலை நேரத்தில் அந்தத் தாய் தனது குழந்தைகளில் ஒருவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி, தானும் மற்ற இளைய குழந்தைகளும் குதிக்கப்போவதாகவும், தன்னுடன் சேர்ந்து குதிக்குமாறும் (sauter avec elle) கேட்டுக்கொண்டுள்ளார்.
கொடூரமான இந்தச் சம்பவத்தில் அந்தத் தாயும் இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
உயிருக்குப்போராடிய நிலையில் (état désespéré) மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுச் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவத்தின்போது வீட்டில் இருந்த குடும்பத்தின் மற்ற குழந்தைகள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, உடனடியாக உளவியல் சிகிச்சைக்காக (prise en charge psychologique) மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்; மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

