தையிட்டி விகாரை வீதி விவகாரம்: காவற்துறையினர் நீதிமன்றில் வழக்கு – தவிசாளருக்கு அழைப்பாணை!
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரை வளாகத்தினுள் உள்ள, வலி. வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான “பவானி” வீதியை மீட்கும் நடவடிக்கைக்குத் தடை கோரி பலாலி காவற்துறையினர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
தனியார் காணிகள் மற்றும் பிரதேச சபைக்குச் சொந்தமான பொது வீதி என்பவற்றை உள்ளடக்கி, எவ்வித அனுமதியுமின்றி தையிட்டியில் இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 28ஆம் திகதி காணி அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது, குறித்த விகாரை எல்லைக்குள் உள்ள சபைக்குச் சொந்தமான வீதியை அடையாளப்படுத்தும் பணிகள் தவிசாளரின் முன்னிலையில் நிறைவுற்றன.
இதனைத் தொடர்ந்து, வீதியை மறித்து அமைக்கப்பட்டுள்ள வேலியை அகற்றுமாறு விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளரினால் எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தவறும் பட்சத்தில் பிரதேச சபையே அவ்வேலியை அகற்றும் எனவும், அதற்கான செலவை விகாராதிபதி செலுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இது தொடர்பாக விகாராதிபதி வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, காவற்துறையினர் தவிசாளரை அழைத்து விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது “இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும்” எனத் தெரிவித்து, அவ்வீதியை மீட்கும் நடவடிக்கையைக் கைவிடுமாறு காவற்துறையினர் அச்சுறுத்தும் தொனியில் கேட்டுக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பொதுச் சொத்தான வீதியை விடுவிப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தவிசாளர் தெரிவித்ததையடுத்து, பலாலி காவற்துறையினர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். பிரதேச சபை வீதியை மீட்கும் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஆராய்ந்த மல்லாகம் நீதவான் நீதிமன்றம், ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்பு வழங்க முடியாது எனக் குறிப்பிட்டு, இது தொடர்பில் விளக்கமளிக்க வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரை நாளை திங்கட்கிழமை (மே 11) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொது வீதியை மீட்பது குறித்து நீதிமன்றம் முக்கிய கட்டளையைப் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

