தமிழக முதலமைச்சருக்கு இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வாழ்த்து!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ (X) தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரு பிராந்தியங்களுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான பிணைப்பைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையும் தமிழ்நாடும் கலாசாரம், வரலாறு மற்றும் வணிக ரீதியாகத் தலைமுறை தலைமுறையாக மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிற்கும் இலங்கையிற்கும் இடையிலான உறவு வலுவடைந்து வரும் நிலையில், எதிர்காலம் மகத்தான பொருளாதார வளர்ச்சியையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வலுவான இந்திய – இலங்கை கூட்டாண்மையின் ஊடாக இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளும் மேலான செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைய முடியும் எனத் தெரிவித்த ஜனாதிபதி, புதிய முதலமைச்சருக்கும் தமிழக மக்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாகத் தனது நல்வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

