மீண்டும் திறக்கப்படும் தெஹ்ரான் வான்வெளி: நாளை முதல் பன்னாட்டு வானூர்திச் சேவைகள் தொடக்கம்!
ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள மிக முக்கியமான வானூர்தி நிலையங்கள், போரினால் ஏற்பட்ட நீண்ட முடக்கத்திற்குப் பிறகு மீண்டும் செயல்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களால் கடந்த இரண்டு மாதங்களாக முடங்கிக்கிடந்த ஈரானின் வான்வழிப் போக்குவரத்து, இப்போது மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் தெஹ்ரானின் இமாம் கொமேனி (Imam-Khomeyni) பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கான விமானங்கள் மீண்டும் பறக்கத் தொடங்கும் என ஈரானின் ‘இஸ்னா’ (ISNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை முதல் முதற்கட்டமாகத் துருக்கியின் இஸ்தான்புல் (Istanbul) மற்றும் ஓமனின் மஸ்கட் (Muscat) ஆகிய நகரங்களுக்கு நேரடி வானூர்திச் சேவைகள் தொடங்கப்படவுள்ளன.
தெஹ்ரானின் இரு பெரும் நிலையங்களான இமாம் கொமேனி மற்றும் மெஹ்ராபாத் (Mehrabad) ஆகியவற்றை மீண்டும் திறப்பதாக அந்நாட்டின் விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த திங்களன்று அறிவித்திருந்தது.
ஈரானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மஷார்ட் நகரில் இருந்து கடந்த திங்கள்கிழமை முதலே பன்னாட்டுச் சேவைகள் தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து, அந்நாட்டின் பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. சுமார் இரண்டு மாதங்களாக அமைதி இழந்திருந்த தெஹ்ரான் வான்வெளியில், இப்போது மீண்டும் பயணிகள் விமானங்களின் சத்தம் கேட்கத் தொடங்கியுள்ளது.

