பிரான்சில் மருத்துவப் படிப்பில் மாபெரும் சீர்திருத்தம்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி, ஆனால் நிதி நெருக்கடியால் பல்கலைக்கழகங்கள் அதிர்ச்சி!
பிரான்சு அரசாங்கம் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் ஆண்டு நுழைவு முறையில் மிகப்பெரிய மாற்றங்களை அறிவித்துள்ளது. மாணவர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று தற்போதைய சிக்கலான நுழைவு முறைகள் ரத்து செய்யப்படவுள்ளன. எனினும், இதற்கான நிதியாதாரங்கள் குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாததால், பல்கலைக்கழகத் தலைவர்களும் மருத்துவ பீடாதிபதிகளும் பெரும் கவலையடைந்துள்ளனர்.
என்னென்ன மாற்றங்கள் வரப்போகின்றன?
பழைய முறைக்கு விடைகொடுப்பு: தற்போது பிரான்சில் மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் முதல் ஆண்டில் ‘பாஸ்’ (PASS – Parcours Accès Spécifique Santé) அல்லது ‘லாஸ்’ (L.A.S – Licence Accès Santé) ஆகிய இரண்டு வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த முறைகள் மிகவும் சிக்கலானவை என்பதால் இவை முற்றாக ரத்து செய்யப்படுகின்றன.
புதிய கட்டமைப்பு: எதிர்வரும் 2027 செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய முறையில், முதல் ஆண்டுப் படிப்பு மூன்று பிரிவுகளைக் கொண்டிருக்கும்:
ஐந்து பிரதான மருத்துவப் பிரிவுகளுக்கும் (MMOPK – Médecine, Maïeutique, Odontologie, Pharmacie, Kinésithérapie)
பொதுவான சுகாதாரப் பாடங்கள்.
உயிரியல் போன்ற ஒரு முதன்மைப் பாடம் (Licence contributive).
பல்துறை சார்ந்த பொதுவான பாடங்கள் (Enseignements transdisciplinaires).
மாணவர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி
புதிய சீர்திருத்தத்தின்படி, ஒரு மாணவர் முதல் ஆண்டில் தேர்ச்சி பெறாவிட்டாலும், மீண்டும் அதே கல்வியாண்டைப் பயின்று மருத்துவப் பிரிவுக்குள் நுழைய மீண்டும் ஒருமுறை வாய்ப்பளிக்கப்படும் (Redoublement). மாணவர் அமைப்புகள் கடந்த இரண்டரை ஆண்டுகளாக முன்வைத்த கோரிக்கை இதுவாகும்.
தங்களின் நீண்டகாலப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக இதனைக் கருதி மாணவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் அச்சமும் நிதி நெருக்கடியும்
மாணவர்கள் கொண்டாடினாலும், பல்கலைக்கழக நிர்வாகங்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன.
பரிஸ் பல்கலைக்கழகத் தலைவர் எட்வர்ட் கமின்ஸ்கி (Edouard Kaminski) கூறுகையில், “தற்போதைய முறையில் ஒரு பெரிய விரிவுரை அரங்கில் (Amphi) 600 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் பாடம் எடுக்கிறார். ஆனால் புதிய முறையின் கீழ் 50 சதவீத அறிவியல் செய்முறை வகுப்புகள் (Travaux pratiques / Travaux dirigés) கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இதனால் 60 மாணவர்களுக்கு ஒரு வகுப்பறை வீதம் 10 புதிய வகுப்பறைகளையும், அதற்கான புதிய ஆசிரியர்களையும் நாங்கள் உருவாக்க வேண்டும்,” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்குப் பெருமளவு நிதி தேவைப்படும் நிலையில், அரசாங்கம் நிதியுதவி குறித்து எந்தத் தெளிவான அறிவிப்பையும் வெளியிடவில்லை. “நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை எங்களுக்குத் தெரியும்; எனவே நிதி கிடைக்காத பட்சத்தில், இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி ஆரம்பத்திலேயே மாணவர் சேர்க்கையைக் கடுமையாகக் குறைக்க வேண்டிய (Réduction drastique des capacités d’accueil) கட்டாயம் எங்களுக்கு ஏற்படும்” என அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிரான்சு அரசாங்கம் அறிமுகப்படுத்திய மருத்துவப் படிப்பு நுழைவுச் சீர்திருத்தம் ஒரு “மாபெரும் தோல்வி” (Fiasco) எனப் பல முன்னணிப் பல்கலைக்கழகங்கள் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தன. அது மாணவர்களுக்குக் கடுமையான மன அழுத்தத்தைக் கொடுத்ததுடன், மருத்துவத் துறையில் பெரும் ஆள் பற்றாக்குறையையும் ஏற்படுத்தியிருந்தது. அந்தத் தவற்றைச் சரிசெய்யவே தற்போதைய புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.
பிரான்சில் மருத்துவப் படிப்பில் நுழைவது குதிரைக்கொம்பாக மாறியுள்ளதால், மருத்துவராகும் கனவுடன் இருக்கும் பல பிரெஞ்சு மாணவர்கள் பெல்ஜியம், ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்று மருத்துவம் பயிலும் அவலநிலை (Exil étudiant அல்லது Exil médical) தற்போது காணப்படுகிறது.
இந்தச் சீர்திருத்தம் கல்வி சார்ந்த முடிவாக மட்டும் பார்க்கப்படவில்லை. அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மனதில் கொண்டு, மாணவர்களின் வாக்குகளைக் கவரும் ஒரு “அரசியல் தந்திரமாகவே” (Coup politique) இது பார்க்கப்படுகிறது எனப் பல மூத்த கல்வியாளர்கள் விமர்சித்துள்ளனர்.
“ஒரு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படும் முதல் ஆண்டு எப்போதுமே பெரும் குழப்பத்தில்தான் முடியும்” என மாணவர்கள் சிலரும் தமது யதார்த்தமான அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

