ஏர்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் தொடர்பில் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் புதல்வர் ஷமீந்திர ராஜபக்ஷ மற்றும் பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்யக் கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (2026 ஏப்ரல் 02) திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க மேலதிக நீதவான் அஸங்க எஸ். போதரகம் இந்த உத்தரவை வழங்கியதுடன், இதனை அனைத்து விமான நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
மேலும், சந்தேகநபர்கள் இலங்கைக்குள் நுழையும் பட்சத்தில் அவர்களைக் கைது செய்து இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் உடனடியாக அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

