அதிநவீன மருத்துவ உபகரணங்களைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்: பிரான்ஸ் மருத்துவமனைகளில் தொடரும் கைவரிசை!
பிரான்சில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சிறு கிளினிக்குகளில் பயன்படுத்தப்படும் பல லட்சம் மதிப்பிலான அதிநவீன மருத்துவக் கருவிகளான ஸ்கேன் இயந்திரங்கள், அல்ட்ராசவுண்ட் (மீயொலி) கருவிகள் போன்றவற்றைத் திருடும் சர்வதேசக் கொள்ளைக் கும்பல்களின் அட்டகாசம் சமீபகாலமாகப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
மகப்பேறு மருத்துவமனை ஒன்றின் கதவுகளைக் கடப்பாரை மற்றும் சுத்தியலால் உடைத்து உள்ளே நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள், வெறும் இரண்டு நிமிடங்களுக்குள் 7 அல்ட்ராசவுண்ட் கருவிகளைத் திருடிச் சென்ற அதிர்ச்சியூட்டும் காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அந்த மருத்துவமனையின் செவிலியரான கிளாரி (Claire) கூறுகையில், “எங்கள் மருத்துவமனையின் பூட்டுகளை உடைத்து அவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். திருடப்பட்ட அதிநவீனக் கருவி ஒன்றின் மதிப்பு சுமார் 80,000 யூரோக்கள் ஆகும். இந்தக் கருவிகளை எளிதாக நகர்த்துவதற்காகச் சக்கரங்கள் பொருத்தப்பட்டிருப்பதால், கொள்ளையர்கள் இவற்றை மிக எளிதாக உருட்டிச் சென்றுவிடுகின்றனர்” என வேதனை தெரிவித்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இதே மாவட்டத்தில் 6 திருட்டுப் புகார்கள் பதிவாகியுள்ளன. பல் மருத்துவ நாற்காலிகள், எண்டோஸ்கோபி கருவிகள் என 1,00,000 யூரோக்கள் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் குறிவைக்கப்படுகின்றன. திருடப்படும் இந்தக் கருவிகள் வெளிநாடுகளில் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதே இந்தத் தொடர் திருட்டுகளுக்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரான்ஸ் முழுவதும் 19 பல் மருத்துவமனைகளில் புகுந்து சுமார் 4.5 மில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்களைத் திருடிய ஒரு மாபெரும் சர்வதேசக் கொள்ளைக் கும்பல் பிடிபட்டது. 350 ருமேனியக் காவலர்களின் தீவிர உதவியோடு இந்தக் கும்பலைச் சேர்ந்த 11 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்துக் குற்றத்தடுப்புப் பிரிவின் தளபதி தொமஸ் ஆண்ட்ரூ (Thomas Andreu) கூறுகையில், “பொதுவாக 3 அல்லது 4 பேர் கொண்ட குழுக்களாகவே இவர்கள் செயல்படுகின்றனர். கிழக்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா அல்லது வட ஆப்பிரிக்க (மக்ரெப்) நாடுகளைச் சேர்ந்த இவர்கள், இதற்காகவே பிரான்சிற்கு வருகின்றனர்; அல்லது ஏற்கனவே இங்கேயே தங்கியிருந்து திட்டமிட்டு இந்தத் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர்,” என்று விளக்கினார்.
ஒரு கதிரியக்கவியல் (Radiology) மருத்துவ மையம் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 12 முறை திருடர்களிடம் சிக்கி, சுமார் 7,00,000 யூரோக்கள் மதிப்பிலான மருத்துவப் பொருட்களை இழந்துள்ளது.
இத்தகைய தொடர் திருட்டுகளில் இருந்து தங்கள் பல லட்சம் மதிப்பிலான கருவிகளைக் காப்பாற்ற மருத்துவர்கள் தற்போது சில புதிய தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். Côte-d’Or மற்றும் Jura பகுதிகளில் மருத்துவ மையம் நடத்தி வரும் மருத்துவர் Aurélien Lamber கூறுகையில், “கொள்ளையர்கள் எளிதில் தூக்கிச் செல்ல முடியாதபடி, கருவிகளைத் தரையோடு சேர்த்து வைத்துப் பூட்டும் புதிய பாதுகாப்பு அமைப்பு ஒன்றை நாங்களே சொந்தமாக உருவாக்கியுள்ளோம். இது திருட்டுகளைத் தடுக்கும் அல்லது திருடர்களின் நேரத்தையாவது தாமதமாக்கும்” என்றார்.
கடந்த ஆண்டு மட்டும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் திருடப்பட்டது தொடர்பாக 26 வழக்குகளைப் பதிவு செய்து, பிரான்ஸ் தேசியக் காவல்துறை (Gendarmerie) தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

