பாப் அல்-மண்டேப் கடற்பரப்பில் அதிகரித்துவரும் பதற்றம்: உலகளாவிய வர்த்தகத்திற்கு அச்சுறுத்தலா?
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழலில், ஹூதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதன் மூலம் ஈரான் – இஸ்ரேல் மோதலில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளதாக அல்-ஜசீரா விடுத்துள்ள செய்தி அறிக்கை குறிப்பிடுகின்றது.
குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான பாப் அல்-மண்டேப் (Bab al-Mandeb) நீரிணையைக் குறிவைத்து ஹூதிகள் அச்சுறுத்தல் விடுக்கக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் இந்தப் பாதையானது, சர்வதேச எரிபொருள் மற்றும் சரக்கு போக்குவரத்தில் பிரதான பங்கு வகிக்கின்றது.
இந்த மோதலானது ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதாகக் கருதும் அரசியல் ஆய்வாளர்கள், பாப் அல்-மண்டேப் நீரிணையை ஒரு மூலோபாய ஆயுதமாக ஹூதிகள் பயன்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இப்பாதையில் போக்குவரத்துத் தடைகள் அல்லது இடையூறுகள் ஏற்படும் பட்சத்தில், அது இஸ்ரேலின் பொருளாதாரத்தை மட்டுமன்றி, உலகளாவிய வர்த்தகச் சங்கிலியையும் கடுமையாகப் பாதிக்கும். ஈரானின் மூலோபாய இலக்குகளுக்கு ஆதரவாக, பொருளாதார ரீதியிலான அழுத்தங்களைப் பிரயோகிப்பதே ஹூதிகளின் நோக்கமாக இருக்கலாம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாப் அல்-மண்டேப் முக்கிய நுழைவாயிலாகும்.
காவற்துறை மற்றும் சர்வதேச கடற்படை பாதுகாப்பு இருந்தபோதிலும், இந்த நீரிணைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக, பல கப்பல் நிறுவனங்கள் தமது போக்குவரத்துப் பாதைகளை மாற்றியுள்ளன.

