இஸ்ரேல் – லெபனான் போர்: பலி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது… 2,600-க்கும் மேற்பட்டோர் காயம்.
ஈரான் ராணுவத்தின் ஆயுத உதவியைப் பெற்று வரும் லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படை, கடந்த 2-ம் தேதி இஸ்ரேலை குறிவைத்து ஏராளமான ஏவுகணைகளை வீசியது.
இதைத் தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தீவிர தாக்குதலைத் தொடங்கியது.
தலைநகர் பெய்ரூட் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை இஸ்ரேல் போர் விமானங்கள் தொடர்ச்சியாக குண்டுகளை வீசி அழித்து வருகின்றன. இதில் நேற்று பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுவீச்சில் 20 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேலின் வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்களால் லெபனான் முழுவதும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 2,600-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கையில், “ஈரான் உதவியுடன் செயல்பட்ட ஹமாஸ் குழுவுக்கு எதிராக 2023 முதல் 2025 வரை நடந்த இரண்டு ஆண்டு காலப் போரில் காசா பகுதி முழுமையாக அழிக்கப்பட்டு, ஹமாஸ் குழு நசுக்கப்பட்டது.
தற்போது அதேபோல் லெபனானின் ஹிஸ்புல்லா குழுவின் மீதும் இஸ்ரேல் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதில் அந்த குழுவின் மூத்த தலைவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த போரின் மூலம் தெற்கு லெபனானின் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

