இந்தியப் பெருங்கடலில் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் – டியேகோ கார்சியா தளத்தை இலக்கு வைத்துத் தாக்குதல்
இந்தியப் பெருங்கடலில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளமான டியேகோ கார்சியாவை (Diego Garcia) இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஈரானிலிருந்து ஏவப்பட்ட இரண்டு இடைநிலைத் தொலைவு ஏவுகணைகள் இந்தத் தளத்தை நோக்கிப் பாய்ந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியை மேற்கோள் காட்டி ரொய்டர்ஸ் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
ஈரானால் ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் இலக்கை எட்டவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஏவுகணை நடுவானிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயலிழந்து வீழ்ந்துள்ளது.
மற்றைய ஏவுகணையை அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று தனது AM-3 இடைமறிப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த முயற்சித்துள்ளது. இந்தத் தற்காப்பு நடவடிக்கை முழுமையாக வெற்றியடைந்ததா என்பது குறித்த ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தத் தாக்குதல் முயற்சியால் டியேகோ கார்சியா தளத்திற்கோ அல்லது அங்கிருந்த வீரர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், இந்தியப் பெருங்கடல் வரை ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளமை சர்வதேச ரீதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாகவும் உருவெடுத்துள்ளது.

