காலி முகத்திடலில் சங்கமித்த பல்லாயிரக்கணக்கானோர்! ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை கோலாகலம்
ஒரு மாத கால புனித நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்கள், இன்று (21) நாடு முழுவதும் ஈதுல் பித்ர் பெருநாளை பக்திப் பரவசத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
இதன் முக்கிய நிகழ்வாக, கொழும்பு காலி முகத்திடலில் மெமன் சங்கத்தின் (Memon Association) ஏற்பாட்டில் விசேட பெருநாள் தொழுகை இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடற்கரை எழில் கொஞ்சும் சூழலில் நடைபெற்ற இந்தத் தொழுகையில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
விசேட பெருநாள் பிரசங்கத்தைத் தொடர்ந்து, நாட்டின் நிலையான அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக விசேட பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டன.
தொழுகை நிறைவடைந்ததும், அங்கு கூடியிருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியுடன் பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
தொழுகைக்குத் தேவையான நீர் விநியோகம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகச் சீர்மையாகச் செய்யப்பட்டிருந்தன.
மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தையும் மனிதாபிமானத்தையும் வலியுறுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மீகச் சந்திப்பு, இலங்கையர் என்ற ரீதியில் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
காலி முகத்திடல் மாத்திரமன்றி, நாட்டின் பல பாகங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் இன்று காலை விசேட தொழுகைகள் இடம்பெற்றதுடன், மக்கள் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

