எச்சரிக்கையைச் செயலாக்கிய ஈரான்:
டியாகோ கார்சியா அமெரிக்க-
பிரித்தானியக் கூட்டுத் தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்!
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரானின் நேரடித் தாக்குதல்கள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன.
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் கூட்டு இராணுவத் தளமாக விளங்கும் இந்தியப் பெருங்கடலில்
அமைந்துள்ள ‘டியாகோ கார்சியா’ (Diego Garcia) தீவை இலக்கு வைத்து ஈரான் குறைந்தது இரண்டு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை (Mid-range ballistic missiles) ஏவியுள்ளதாக ‘தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ (The Wall Street Journal) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகள்:
வெளியாகியுள்ள பாதுகாப்புத் தரவுகளின்படி, ஈரானால் ஏவப்பட்ட குறித்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுவானிலேயே (mid-flight) செயலிழந்து வீழ்ந்துள்ளது.
மற்றைய ஏவுகணையானது டியாகோ கார்சியா தீவை நெருங்கிய போது, அங்குப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றிலிருந்து ஏவப்பட்ட அதிநவீன இடைமறிப்பு ஏவுகணை (US interceptor) மூலமாக வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க, பிரித்தானிய மௌனம்:
பிரித்தானியாவின் இராணுவத் தளங்களை ஈரானுக்கு எதிரான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த பிரதமர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து,
ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்த தற்காப்புத் தாக்குதல் எச்சரிக்கையின் நேரடி விளைவாகவே இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.
எனினும், ரோய்ட்டர்ஸ் (Reuters) செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த மாபெரும் ஏவுகணைத் தாக்குதல்
குறித்து வெள்ளை மாளிகையோ அல்லது வாஷிங்டனில் உள்ள பிரித்தானியத் தூதரகமோ உடனடியாக எவ்விதக் கருத்துகளையும் வெளியிட மறுத்துவிட்டமை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

