தடைகளைத் தளர்த்திய ட்ரம்ப் நிர்வாகம்:
உலக எண்ணெய் விலையைக் குறைக்க ஈரானிய, ரஷ்ய எண்ணெய்க்கு 30 நாள் அவசர அனுமதி!
மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்வடைந்துள்ள நிலையில்,
அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு எதிர்பாராத அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
நடுக்கடலில் தேங்கியுள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீதான வர்த்தகத் தடைகளை ஒரு மாத காலத்திற்கு (30 நாட்கள்) அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது.
சீனாவின் ஏகபோகத்தைத் தடுக்க வியூகம்:
இந்த ஒரு மாத கால அனுமதியானது எதிர்வரும் ஏப்ரல் 19-ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
அமெரிக்கத் திறைசேரிச் செயலாளர் (Treasury Secretary) ஸ்காட் பெசன்ட் (Scott Bessent) இந்தத் திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.
ஈரானின் மலிவான எண்ணெயைச் சீனா மட்டுமே தனித்து வாங்கி முற்றுமுழுதாகப் பயனடைவதைத் (Sole beneficiary) தடுக்கும் ஒரு தந்திரோபாய நகர்வாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.
ரஷ்யாவிற்கும் சலுகை, ஆனால் கட்டுப்பாடுகளும் உண்டு:
ஈரான் மட்டுமன்றி, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை அதிகரிக்கும் நோக்கில் குறிப்பிட்ட
சில ரஷ்ய எண்ணெய் விநியோகக் கப்பல்கள் மீதான தடைகளையும் ட்ரம்ப் நிர்வாகம் 30 நாட்களுக்குத் தளர்த்தியுள்ளது. எனினும், இந்தத் தற்காலிக அனுமதியில் சில கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, இந்த எண்ணெயை வடகொரியா (North Korea) அல்லது கியூபா (Cuba) ஆகிய நாடுகளுடனோ அல்லது அந்நாடுகளைச் சேர்ந்தவர்களுடனோ வர்த்தகம் செய்வதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

