“ஒரே மணித்தியாலத்தில் ஈரானை இருட்டில் மூழ்குடிப்போம்” – வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை
ஈரானுடனான யுத்தம் உலக நாடுகள் இதுவரை கண்டிராத ஒரு புதிய பரிமாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஈரானின் மின்சாரக் கட்டமைப்பை ஒரே மணித்தியாலத்திற்குள் முடக்கும் வல்லமை அமெரிக்காவிற்கு உள்ளதாகவும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகைக்கு வெளியே ஊடகவியலாளர்களைச் சந்தித்த போதே அவர் இந்த அதிரடித் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
இராணுவ ரீதியாக முடக்கப்பட்ட ஈரான்
ஈரானிய இராணுவத்தின் தற்போதைய நிலை குறித்து விவரித்த அதிபர் ட்ரம்ப், அந்நாட்டின் தற்காப்பு அரண்கள் முற்றுமுழுதாகச் சிதைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
தடையற்ற வான் ஆதிக்கம்: ஈரானிடம் தற்போது கடற்படை, விமானப்படை அல்லது வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏதுமில்லை. இதனால் அமெரிக்கப் போர் விமானங்கள் ஈரானிய வான்பரப்பில் எவ்விதத் தடையுமின்றி (Free range) பறந்து இலக்குகளைத் தாக்கி வருகின்றன.
ஹோர்மூஸ் நீரிணை: நீரிணையில் இருந்த ஈரானியப் படகுகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது அங்குள்ள அச்சுறுத்தல்கள் பெருமளவு குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டமைப்பு மீதான அச்சுறுத்தல்
யுத்தத்தின் அடுத்தகட்ட நகர்வு குறித்துப் பேசிய ட்ரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகளைச் சிதைக்கும் ஆற்றல் அமெரிக்காவிற்கு உள்ளதைச் சுட்டிக்காட்டினார். “நாங்கள் நினைத்தால் ஈரானின் ஒட்டுமொத்த மின்சார விநியோகத்தையும் ஒரே மணித்தியாலத்தில் செயலிழக்கச் செய்ய முடியும். அதனை மீண்டும் அவர்கள் சீரமைக்க 25 ஆண்டுகள் தேவைப்படும். இருப்பினும், அந்நாட்டை முற்றுமுழுதாக அழிப்பது எமது நோக்கமல்ல” என அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் சந்தை மற்றும் மூலோபாய இருப்பு
அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த, நாட்டின் மூலோபாய எரிபொருள் இருப்புகளை (Strategic Petroleum Reserve) மிக விரைவில் சந்தையில் வெளியிடப் போவதாக ட்ரம்ப் அறிவித்தார்.
மேலும், கடந்த காலத்தில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 25 டொலராக இருந்தபோது, அதனைச் சேமித்து வைப்பதற்கான தனது திட்டத்தை ஜனநாயகக் கட்சியினர் தடுத்தமையே தற்போதைய பொருளாதாரச் சவால்களுக்குக் காரணம் என அவர் கடுமையாகச் சாடினார். தற்போதைய நிலையில், ஈரானில் ஒரு நிலையான மற்றும் சிறந்த நிர்வாகத்தை உருவாக்குவதே அமெரிக்காவின் இலக்கு என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

