அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார்.
இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய இராணுவத் தாக்குதல்கள் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரில் பேரழிவை அதிகரிக்கும். நகரங்களில் குண்டுவீச்சு, பொதுமக்களைக் கொல்வது, ஒரு புதிய போர் அரங்கைத் திறப்பது போன்றவற்றை அமெரிக்கர்கள் விரும்பவில்லை. அவர்கள் மற்றொரு போரை விரும்பவில்லை. அவர்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியிலிருந்து நிவாரணம் பெற விரும்புகிறார்கள். அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள்.
ஒவ்வொரு நியூயார்க்கரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் நான் கவனம் செலுத்துகிறேன். எங்கள் பொலிஸ் கமிஷ்னர் மற்றும் அவசரகால மேலாண்மை அதிகாரிகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். அரசின் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிப்பது மற்றும் மிகுந்த எச்சரிக்கை வாய்ந்த இடங்களில் ரோந்துகளை மேம்படுத்துவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.
கூடுதலாக, நியூயார்க்கில் வசிக்கும் ஈரானியர்களிடம் நான் நேரடியாகப் பேச விரும்புகின்றேன். நீங்கள் இந்த நகரத்தின் கட்டமைப்பின் ஒரு பகுதி. நீங்கள் எங்கள் அண்டை வீட்டார். சிறு வணிக உரிமையாளர்கள், மாணவர்கள், கலைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள். நீங்கள் இங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

