ஈரான் உச்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டார்: ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்!
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரச ஊடகங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.
நேற்றைய தினம் (பெப்ரவரி 28) தெஹ்ரானில் உள்ள அவரது அலுவலகத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இச்செய்தியை முன்னரே அறிவித்திருந்த நிலையில், இன்று காலை ஈரான் அரசு இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
இந்தத் தாக்குதலில் காமேனியின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இதற்குப் பழிவாங்கக் கோரி ஈரானின் பல நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி பாரிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய இடங்களில் மேலதிக காவற்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் காவல் நிலையங்களுக்கு அருகில் போராட்டக்காரர்கள் திரண்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கில் பெரும் அரசியல் மாற்றத்தையும், போருக்கான சூழலையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.
இந்தத் தாக்குதலில் பல கோடி டொலர் பெறுமதியான இராணுவத் தளபாடங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது. ஈரானின் புதிய தலைமைத்துவம் குறித்த ஆலோசனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்றைய திகதி (மார்ச் 1, 2026) நிலவரப்படி, போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.

