அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா ரஸ்யா மற்றும் இந்தியாவின் நிலைப்பாடுகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 86 வயதான அலி காமேனி கொல்லப்பட்டமை குறித்து அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் காமேனியின் மரணத்தை உறுதிப்படுத்தியதோடு, கடுமையான கருத்துக்களையும் முன்வைத்துள்ளார்.

காமேனியை “வரலாற்றின் மிக மோசமான மனிதர்களில் ஒருவர்” எனக் குறிப்பிட்ட ட்ரம்ப், அவரது மரணம் ஈரானிய மக்களுக்கும், அவரால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கும் கிடைத்த “நீதி” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் ஈரானிய மக்கள் தங்கள் நாட்டை மீண்டும் மீட்டெடுப்பதற்கான “ஒரே ஒரு சிறந்த வாய்ப்பு” இதுவென அழைப்பு விடுத்துள்ள அவா் வோஷிங்டன் எதிர்பார்க்கும் “நிலையான அமைதி” கிடைக்கும் வரை துல்லியமான குண்டுவீச்சுகள் (pinpoint bombing) தொடரும் என எச்சரித்துள்ளார்.

இதேவேளை ஈரான் மீதான இராணுவத் தாக்குதல்களுக்கு சீனா தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, பதற்றத்தை மேலும் அதிகரிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனச் சீன வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.

பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் குறித்து சீனா மிகுந்த கவலை கொள்வதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியா தனது வழக்கமான சமநிலையான இராஜதந்திர நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து “ஆழ்ந்த கவலை” (Deeply Concerned) என இந்தியா குறிப்பிட்டுள்ளது.

அனைத்துத் தரப்பினரும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வன்முறையைக் கைவிட்டு இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வுகாண வேண்டும் என்றும் இந்தியா கோரியுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தூதரகங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ரஸ்யா , அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை “இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு” எனக் கண்டித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் (EU) அணுசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், பிராந்திய அமைதிக்காகவும் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin