பாகிஸ்தானில் அமெரிக்கத் தூதரகங்கள் மீது தாக்குதல் – 8 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனா்

ஈரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் தூதரகப் பணிமனைகள் மீது இன்று (2026 மார்ச் 1, ஞாயிற்றுக்கிழமை) போராட்டக்காரர்கள் பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணிமனைக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர். போராட்டக்காரர்கள் கட்டிடத்தின் ஜன்னல்களை அடித்து நொறுக்கியதுடன், கட்டிடத்தின் ஒரு பகுதிக்குத் தீ வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வன்முறையைத் தடுக்க காவல்துறையினா் மற்றும் துணை இராணுவப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டு வீச்சில் இதுவரை 8 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

“அமெரிக்கத் தூதரகத்தைத் தீயிட்டுக் கொளுத்தி எமது தலைவரின் மரணத்திற்குப் பழிவாங்குவோம்” என போராட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிடப் போராட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தூதரகப் பகுதிக்குச் செல்லும் பாதைகளில் கன்டெய்னர்கள் வைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

லாகூர் மற்றும் ஸ்கர்டு (Skardu) ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு “உலகளாவிய எச்சரிக்கை” (Worldwide Caution) விடுத்துள்ளது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அமெரிக்கர்களை அது கேட்டுக் கொண்டுள்ளது.

Recommended For You

About the Author: admin