மகனின் அன்பளிப்புப் பணத்தைத் திருடி மறுமணம் செய்த தந்தை

மகனின் அன்பளிப்புப் பணத்தைத் திருடி மறுமணம் செய்த தந்தை – பணத்தைத் திருப்பித் தருமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சீனாவின் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன், ஆண்டுதோறும் சீனப் புத்தாண்டு உள்ளிட்ட விசேட காலங்களில் உறவினர்களிடம் இருந்து கிடைக்கும் ‘சிவப்பு உறை’ (Red Packet) அன்பளிப்புப் பணத்தைச் சிறுகச் சிறுகச் சேமித்து வந்துள்ளான். இவ்வாறு சுமார் 82,750 யுவான் வரை அவனது பெயரில் இருந்த வங்கிக் கணக்கில் சேமிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த சிறுவனின் பெற்றோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்துகொண்ட நிலையில், அவன் ஆரம்பத்தில் தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்து வந்தான். இதற்கிடையில், சிறுவனின் தந்தை வேறொரு பெண்ணை மறுமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தார். திருமணத்திற்குத் தேவையான பணத்திற்காக, சிறுவனின் வங்கிக் கணக்கில் இருந்த மொத்தப் பணத்தையும் அவனது அனுமதி இன்றி தந்தை எடுத்துத் தனது திருமணச் செலவுகளுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

தந்தை மறுமணம் செய்த பிறகு, அந்தச் சிறுவன் தனது தாயின் பராமரிப்பிற்குச் சென்றான். அப்போதுதான், தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் எடுக்கப்பட்டிருப்பதைச் சிறுவனும் அவனது தாயும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, தனது பணத்தைத் திருப்பித் தருமாறு சிறுவன் தனது தந்தைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தான்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனுக்குக் கிடைத்த அன்பளிப்புப் பணம் என்பது அவனது தனிப்பட்ட சொத்து என்றும், அதனைப் பெற்றோர் பாதுகாப்பாளர்களாக இருந்து நிர்வகிக்கலாமே தவிர, பிள்ளைகளின் அனுமதி இன்றிச் செலவிட உரிமையில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

தந்தை தனது தனிப்பட்ட தேவையற்ற செலவுகளுக்காகவும், மறுமணத்திற்காகவும் அந்தப் பணத்தைப் பயன்படுத்தியது சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், வட்டியுடன் சேர்த்து அந்தப் பணத்தை மீண்டும் மகனிடமே ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

சீனாவில் இத்தகைய ‘சிவப்பு உறை’ பண விவகாரங்கள் அடிக்கடி குடும்பத் தகராறுகளாக மாறுவது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin