மன்னாரில் உணவகங்கள் மீது அதிரடிச் சோதனை
மன்னார் நகர சபை எல்லைக்குள் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் அதிரடிச் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் நகரில் உள்ள உணவகங்களில் சுகாதாரக் குறைபாடுகள் நிலவுவதாகப் பொதுமக்கள் தொடர்ச்சியாக முன்வைத்த புகார்களை அடுத்து, கடந்த வாரம் விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.
தாழ்வுபாடு பிரதான வீதியிலுள்ள வைத்தியசாலைப் பகுதியை அண்டிய இரண்டு உணவகங்கள், உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதியிலுள்ள இரண்டு உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் ஆகியவற்றிலேயே இவ்வாறு விசேட சுற்றிவளைப்புத் தேடுதல் நடத்தப்பட்டது.
சோதனையின் போது உணவு சமைக்கும் இடங்கள் அசுத்தமாக இருந்தமை, முறையற்ற களஞ்சியப்படுத்தல் , கழிவு நீர் மற்றும் திடக்கழிவுகளை அகற்றுவதில் முறையான கட்டமைப்பு இல்லாமை,
அதிகளவிலான ஈக்கள் மற்றும் பூச்சிகள் நடமாட்டம் காணப்பட்டமை, : ஊழியர்கள் கையுறைகள் (Gloves) அணியாமை மற்றும் அடிப்படை சுகாதார முறைகளைப் பின்பற்றாமை போன்ற ஆபத்தான சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டன:
மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகப் பரிசோதகர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
குறைபாடுகள் கண்டறியப்பட்ட உணவகங்களுக்கு எதிராக மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் தங்களது சுகாதாரத் தரத்தை உடனடியாக மேம்படுத்தத் தவறினால், அவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


