இரு பார்வைகளையும் இழந்த மாணவர்கள் – யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

இரு பார்வைகளையும் இழந்த மாணவர்கள் – யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உத்வேகம் தரும் நிகழ்வாக, கண்பார்வையற்ற இரண்டு மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து பொதுக்கலைமாணி (Bachelor of Arts) பட்டத்தைப் பெற்றுள்ளனர்.

யாழ். பல்கலைக்கழகத்தின் 40-ஆவது பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வில் (சனிக்கிழமை) இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

இவா்களில் துரைராசா அருண்குமாரின் கல்விப் பயணம்
இவரது கல்விப் பயணம் உடல் தகுதியுள்ள சாதாரண மாணவர்களுக்கு நிகராகவும், சில இடங்களில் அவர்களை விடவும் மேலானதாகவும் அமைந்துள்ளது:

வாழ்வக வரலாற்றில், புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுச் சித்திபெற்ற ஒரே பார்வையற்ற மாணவன் என்ற பெருமை இவரையே சேரும்.

க.பொ.த. சாதாரண தரத்தில் 3A, 3B, 2C, S போன்ற சிறந்த பெறுபேறுகளைப் பெற்றார். க.பொ.த. உயர் தரத்தில்3A பெறுபேறுகளைப் பெற்றுத் தனது திறமையை நிரூபித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இந்தப் பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெற்றாலும், அருண்குமார் மற்றும் அனந்தினி ஆகியோரின் வெற்றி சமூகத்திற்கு ஒரு வலிமையான செய்தியைச் சொல்லியுள்ளது.

இரு பார்வைகளையும் இழந்த நிலையில், பிரெய்லி முறை மற்றும் ஏனைய நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் நீண்ட போராட்டத்திற்குப் பின் இவர்கள் பட்டம் பெற்றமைக்குப் பேராசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin