இந்தியா, பாகிஸ்தான் போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் பாதுகாப்பிற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இந்திய வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக இந்திய ரோ புலனாய்வு சேவை, இந்திய பாதுகாப்புப் படைகள் மற்றும் வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்புப் படையினர் கொழும்புக்கு பிரவேசித்துள்ளனர்.
போட்டியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளும் கொழும்புக்கு பிரவேசித்துள்ளன.
இந்த போட்டி நடைபெறும் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் தலைகவசம், ஜக்கெட்டுகள், பயணப் பொதி மற்றும் மதுபானங்கள் கொண்டு வர அனுமதிக்கப்படமாட்டாது.
அதேநேரம், ட்ரோன்கள், மின்னணு பொருட்கள், இசைக்கருவிகள் ஆகியவற்றையும் மைதானத்திற்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு வுட்லர் தெரிவித்தார்.
மைதானத்திற்குள் நுழையும் போது பார்வையாளர்கள் அனைவரும் கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இந்தப் போட்டியின் போது அமைதியின்மை அல்லது சீர்குலைக்கும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

