இலங்கையில் 10% சதவீதமானோர் தங்களுக்கு சிறுநீரக நோய் இருப்பதை அறியாமலே உள்ளனா்
இலங்கையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 10% சதவீதமானோர் தங்களுக்கு அந்த நோய் இருப்பதை அறியாமலேயே இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேசிய சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை நிறுவனத்தின் விசேட நிபுணர் டாக்டர் அர்ஜுன மாரசிங்க இது குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கையில் கணிசமான மக்கள் தங்களுக்குச் சிறுநீரகப் பாதிப்பு இருப்பதை ஆரம்பக் கட்டத்தில் உணர்வதில்லை. நோய் முற்றிய பின்னரே பலருக்கு இது கண்டறியப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை (High BP) கட்டுப்படுத்தாதவர்களுக்குச் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதும் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறனைப் பாதிக்கும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் மேற்கூறிய பாதிப்புகள் உள்ளவர்கள் வழக்கமான இடைவெளியில் சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Checks) செய்துகொள்வது கட்டாயமாகும் எனவும் தொிவித்துள்ளாா்.
சிறுநீரக நோய் ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், முறையான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகள் மூலம் அது முற்றிய நிலைக்குச் (Serious Complications) செல்வதைத் தடுக்க முடியும் என டாக்டர் மாரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

