காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா..

காரைதீவு பிரதேச சபையில் பாரம்பரிய முறையில் தைப்பொங்கல் விழா..

தைத்திருநாளை முன்னிட்டு காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் காரைதீவு தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையிலும் அம்பாரை மாவட்ட கலாச்சார உத்தியோகஸ்தர் கு.ஜெயராஜின் வழிகாட்டலிலும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் பொங்கல் கொண்டாட்டம் மிகவும் சிறப்பான முறையில் வெள்ளியன்று( 13)நடைபெற்றது.

 

வயல் உழுது அறுவடை செய்து புதிர் எடுத்து நெல்லுக் குற்றி புத்தரிசி எடுத்து பொங்கல் பொங்கும் நிகழ்வுகளை கௌரவ அதிதியாக கலந்து கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன், காரைதீவு பிரதேச செயலாளர் ஜி.அருணன்,ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச, நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் ரூபசாந்தன் பாடசாலை மாணவர்கள், ஆலய தர்மகத்தாக்கள் , ஊர் நலன்விரும்பிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கலந்து சிறப்பித்தவர்களிற்கு நினைவுச்சின்னமாக சங்ககால இலக்கிய வரலாற்றில் கூறப்படும் பொற்கிழி வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

 

இயற்கைக்கும் விவசாயத்திற்கும் நன்றி கூறும் இந்த பண்டிகை மனித வாழ்வின் அடிப்படை மதிப்புக்களை நினைவு கூரும் வண்ணமாக பண்டைய விவசாய முறைகளையும் அதற்காக உழவர்கள் பயன்படுத்திய பண்டைய கருவிகளையும் காட்சிப்படுத்தியிருந்தனர். அக்கால பெண்கள் அருவி வெட்டும் போது பாடும் நாட்டார் பாடல்களையும் பாடசாலை மாணவர்கள் இனிமையான ராகத்துடன்

பாடியதுடன்

அழகிய நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.

 

இவ்வாறான பாரம்பரிய விழா கொண்டாட்டங்களை பணிபுரியும் இடங்களில் நடத்துவதனால் இன,மத பேதமின்றி நல்லிணக்கத்தை வளர்த்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுவதாகவும் மனித நேயத்துடன், பரஸ்பர புரிதலுடனும் ஒற்றுமையுடனும் செயல்படுவதே சமூக முன்னேற்றத்தில் உண்மையான அடையாளம் என்பதை இந்நிகழ்வு வலியுறுத்தியது.

Recommended For You

About the Author: admin