மன்னார் வீதி அபிவிருத்தியில் மோதல் : நகரசபை தலைவருடன் கைகலப்பில் ஈடுபட்ட நபர் வைத்தியசாலையில்!
மன்னார் பாத்திமா புரம் பகுதியில் வீதி அபிவிருத்திப் பணியின் போது, மன்னார் நகரசபைத் தலைவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன்னார் நகர சபைக்குச் சொந்தமான வீதிகளில் கிரவல் பரப்பும் பணியின் போது ஏற்பட்ட இந்த மோதலில், எமில் நகர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எமில் நகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், நீண்டகாலமாகத் தனது பகுதி வீதியையும் அமைத்துத் தருமாறு நகரசபை தலைவரிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளார்.
இன்று (ஜனவரி 30) பாத்திமா புரம் பகுதியில் வீதிப் பணிகள் நடந்தபோது, “தனிப்பட்ட ஒருவருக்காக இந்த வீதியை அமைக்க முன்னிற்பது சரியா? ஏன் எங்கள் பகுதியைச் செய்யவில்லை?” என அந்த நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில், நகரசபை தலைவர் தன்னைத் தள்ளிவிட்டுத் தாக்கியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். பதிலுக்கு இருவரும் கற்களால் எறிந்து தாக்கியுள்ளனர்.
இந்த மோதலின் போது வீசப்பட்ட கற்கள் அங்கிருந்த நகரசபை பெண் உறுப்பினர் ஒருவர் மீதும் பட்டுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த நபர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் போது கற்களால் தாக்கப்பட்டமை தொடர்பாக நகரசபை பெண் உறுப்பினர் மன்னார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்
மன்னார் காவல்துறையினர் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

