தமிழ் மற்றும் மலையாள திரைப்பட உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் ஜெயராம். இவரது மகன் காளிதாசும் நடிகர் ஆவார். இவர் ‘மீன் குழம்பும் மண் பானையும்’, ‘புத்தம் புது காலை’, ‘பாவக் கதைகள்’, ‘ஒரு பக்க கதை’ போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
குடும்பத்துடன் காளிதாஸ் ஜெயராமன் சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் மலையாளத்திலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார்.
காளிதாஸ் சமீபத்தில் காதலில் விழுந்திருப்பதாக தெரிவித்தார். தனது காதலியின் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அவரது காதலியின் பெயர் தாரினி. இவர் மாடலிங் துறையைச் சேர்ந்தவர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.