“தமிழரசு கட்சிக்குள் மூக்கை நுழைக்க வேண்டாம்” – அநுர தரப்பிற்கு சி.வி.கே. சிவஞானம் கடும் எச்சரிக்கை !
யாழ். கல்வியங்காட்டிலுள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், தமிழரசுக் கட்சிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான அரசியல் மோதல் குறித்து வெளிப்படையாகப் பேசினார்.
உள்வீட்டு விவகாரங்களில் தலையீடு: தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களான சிறிதரன் மற்றும் சுமந்திரன் இடையிலான விவகாரங்கள் கட்சியின் உள்வீட்டுப் பிரச்சினை என்றும், அதில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். “எம்மை மலினப்படுத்த நினைக்கும் அநுர தரப்பின் கனவு ஒருபோதும் பலிக்காது” என அவர் இதன்போது தெரிவித்தார்.
அரச நிதியில் ‘ஷோ’ (Show):
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து விமர்சித்த அவர், மக்கள் பிரதிநிதிகளுக்கோ அல்லது ஏனைய கட்சிகளுக்கோ உரிய அழைப்புகள் விடுக்கப்படவில்லை என்றார். அரச நிதியைப் பயன்படுத்தி தேசிய மக்கள் சக்தி (NPP) அல்லது ஜே.வி.பி. மாத்திரம் கலந்துகொண்டு ‘படம் காட்டுவதை’ (Show) நிறுத்திக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தமது அரசியல் லாபத்திற்காகத் தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும், கட்சியின் விவகாரங்களை தாங்களே கவனித்துக் கொள்வோம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஜனாதிபதி எதிர்காலத்தில் இத்தகைய பாரபட்சமான செயற்பாடுகளைத் தவிர்த்து, பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சி.வி.கே. சிவஞானம் இந்த ஊடக சந்திப்பின் வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.

