யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி..!

யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படும் – வடபிராந்திய கடற்படைத் தளபதி உறுதி..!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் லியனஹமகே மாவட்ட செயலரிடம் தெரிவித்துள்ளார்.

வடபிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் B. லியனஹமகே தலைமையில் நேற்றைய தினம் புதன்கிழமை காங்கேசன்துறை கடற்படை அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

 

இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, கடல்வழியால் மேற்கொள்ளப்படும் கடத்தல், காணி விடுவிப்பு, வட தாரகை கப்பல் திருத்தம், எழுதாரகை கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவருதல், கடற்கரை தூய்மைப்படுத்தல், திண்மக்கழிவு பொறிமுறை, கடற்கரை வீதி புனரமைப்பு உள்ளிட்ட மிக முக்கியமான விடயங்கள் ஆராயப்பட்டு ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

 

அத்துடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுவருவதாகவும், கடற்படை தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும், அத்துமீறலை கட்டுப்படுத்த பொறிமுறை உருவாக்கப்படும் எனவும் வடபிராந்திய கடற்படைத் தளபதி தெரிவித்ததுடன், கடல்வழியாக கடத்தப்படும் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

 

மேலும், கடற்படையின் பயன்பாட்டிலுள்ள காணிகள் சீரான நடைமுறைகளில் விடுவிக்கப்படும் எனவும், தேவையான காணிகள் முறையாக பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

 

அதேவேளை குறிகட்டுவான் இறங்கு துறையின் மூலம் இலகுவான போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற மாவட்டச் செயலகம், கடற்படை, பிரதேச செயலகம் பிரதேச சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பன ஒன்றிணைந்து செயற்படுவது எனவும் பொருத்தமாகவிருக்கும் எனவும் கலந்துரையாடப்பட்டது.

 

அதன் போது, நயினாதீவு உள்ளிட்ட தீவுப்பகுதிக்கான செல்லும் படகுகளின் தரச்சான்றிதழ் இல்லை என மாவட்ட செயலரால் சுட்டிக்காட்டப்பட்டதுடன், தரச்சான்றிதழை பெற்றுக்கொள்ள பெரும் நிதி செலவு படகுகளின் உரிமையாளர்களுக்கு செலுத்த முடியாத நிலையிருப்பதால் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கடிதம் எழுதி ஒழுங்கான முறைக்கு கொண்டுவர அமைச்சின் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

 

மேலும் கடல் பயணத்தில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்ட போது நேற்றைய தினம் புதன்கிழமை நெடுந்தீவில் துரதிஷ்டமாக ஏற்பட்ட இறப்பு தொடர்பாக கருத்து பரிமாறப்பட்டு கவலை தெரிவிக்கப்பட்டது.

 

அதேவேளை மயிலிட்டி இறங்குதுறையிலிருக்கும் அத்துமீறிய இந்திய மீனவர்களின் படகுகளை அப்புறப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

அத்துடன் எழுதாரகை படகை திருத்தி கொடுக்கப்படும் பட்சத்தில் அதனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறுப்பேடுக்க கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்ட போது அதனைத் திருத்த பாரிய நிதி செலவு ஏற்படும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

 

இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண செயலர் மருதலிங்கம் பிரதீபன், மேலதிக செயலர்களான கே. சிவகரன் மற்றும் பா. ஜெயகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் திரு. குரூஸ், பிரதேச செயலாளர்கள், கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: admin