ஆரோக்கியம் இழந்துபோகும் திருகோணமலை மட்டிக்களி பூங்கா..!
திருகோணமலைவாழ் மக்களின் ஆரோக்கியம், மன நிம்மதி என்பவற்றுக்காக மட்டுமல்லாமல் திருகோணமலையின் அழகிற்காகவும் மட்டிக்களி பகுதியில் லகூன் பூங்காவானது அமைக்கப்பட்டது. இதனை நல்ல முறையில் பயன்படுத்தி பாதுகாக்க வேண்டியது அனைவரது பொறுப்புமாகும்.
குறித்த பகுதியில் அதிகாலையிலும், மாலையிலும் பலர் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மேற்கொள்வதையும், மன நின்மதிக்காக கடலையும், வானத்தையும் இரசித்துக் கொண்டிருக்கின்றவர்களையும், மாணவர்களின் வகுப்பு முடியும்வரை காத்திருக்கும் பெற்றோர்களின் ஆரோக்கியமான உரையாடல்களையும் அங்கு காண முடிகின்றது. இவ்வாறான இடத்தில் இவற்றை கேள்விக்கு உட்படுத்துகின்றவகையில் மக்களை முகம் சுழிக்க வைக்கின்ற நடத்தைகள் பலவற்றை அண்மைக்காலமாக காண முடிவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலை தொடருமானால் குறித்த பூங்காவின் ஆரோக்கியம் பாதிப்படையும் இதனால் அதன் மூலம் நன்மை அடைகின்றவர்களும் பாதிக்கப்படுவார்கள் அதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் எல்லா தரப்பினராலும் இதனை பயன்படுத்த முடியாமல் போகலாம்.
எனவே இந்த பூங்காவை ஆரோக்கியத்துடன் பேணவேண்டுமாயின் நாம் அனைவரும் ஆரோக்கியமாக நடந்து கொள்வது அவசியம்.

