26 நாட்களாக தொடரும் முத்துநகர் விவசாயிகளின் போராட்டம்..!
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தங்களின் அபகரிக்கப்பட்ட விவசாயத்தை நிலத்தை மீளப் பெற்றுத்தரக் கோரிய தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை இன்றுடன் (12) 26ஆவது நாளாக திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.
பிரதமரினால் வழங்கப்பட்ட இரண்டாம் கட்ட தீர்வுக்காக இன்னும் 8 நாட்களே உள்ளனவு எனவும் குறித்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முன்னர் தங்களது காணியை பெற்றுத்தரக்கோரிய போராட்டங்களை நடாத்திய போதிலும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸாரினால் இதற்கு முன்னர் ஐந்து விவசாயிகள் கைது செய்யப்பட்டு சிறையில் சுமார் 14 நாட்கள் அடைக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
சுமார் 800 ஏக்கரில் தற்போது வரைக்கும் 200 ஏக்கரளவில் சூரிய மின் சக்தி திட்டத்துக்கான வேலைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அப் பகுதியில் உள்ள இரு குளங்களை மூடி இதனை முன்னெடுப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வேண்டாம் வேண்டாம் பொய் வாக்குறுதி, விவசாயிகளிடமிருந்து கொள்ளையடித்து கம்பனிகளுக்கு வழங்கப்பட்ட முத்து நகர் விளை நிலங்களை உடனடியாக திருப்பிக் கொடு போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

