கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்..!
விளையாட்டு துறை அமைச்சர் பங்கேற்புடன் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்.
கிளிநொச்சி மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் விளையாட்டு துறை கெளரவ அமைச்சர் சுனில் குமார கமகே மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் s.முரளிதரன்,மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ்,கடற்றொழில் அமைச்சரின் இணைப்பாளர் மருங்கன் மோகன்,மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்,விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள்,உடற்கல்வி ஆசிரியர்கள்,விளையாட்டு கழகங்களில் தலைவர்கள்,அங்கத்தவர்கள்,மற்றும் பயிற்விப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்ட பொது விளையாட்டு மைதானம்,நீச்சல் தடாகம் மற்றும் உள்ளக கட்டடத் தொகுதியில் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டியுள்ள திருத்த பணிகள் குறித்து முன்மொழிவொன்றை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் முன்வைத்திருந்தார்.
மேற்கொள்ளப்படவேண்டிய வேலைகளுக்கான செலவு விவரங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை விரைவாக தருமாறும் அதற்கான நிதியை பெற்றுத் தரமுடியும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு கழகங்களின் தேவைகள்,எதிர்பார்ப்புக்கள் குறித்த விடயங்களை கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு துறை அமைச்சரிடம் நேரடியாக தெரிவித்திருந்தனர்.
அத்தோடு விளையாட்டு கழகங்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர் மற்றும் விளையாட்டு துறை பயிற்றுவிப்பாளர்கள் தாம் விளையாட்டுத்துறையில் எதிர்நோக்கும் சவால்கள் குறித்த விடயங்களை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இதற்கு பதில் அளித்த விளையாட்டுதுறை அமைச்சர் அவர்கள்….
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டு துறையில் காணப்படும் பிரச்சனைகளை ஆராய்வதற்காக ஒன்றுகூடியிருக்கின்றோம்.
நீங்கள் சுட்டிக்காட்டிய பிரச்சனைகள் பல காலமாக இருந்துவருகின்ற பிரச்சனைகளாக உள்ளன.
அனைத்து பிரச்சனைகளையும் நாம் ஆய்வு செய்து குறுகிய காலத்தில் தீர்க்க கூடிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளும் அதேவேளை ஏனையவற்றை கட்டம் கட்டமாக தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
பாடசாலைகளில் நிலவும் விளையாட்டு உபகரணங்களுக்கான குறைபாடுகள் நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் ஏற்பாடுகளை உடனடியாக செய்ய எண்ணியுள்ளதாகவும் விளையாட்டு கழகங்களுக்கு தேவைப்படுகின்ற தேவைப்பாடுகள் தொடர்பாக அறிக்கைகளை தருமாறும் கேட்டுக்கொண்டார்.


