அக்கரைப்பற்று பொதுச் சந்தையில் தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பம்!
அக்கரைப்பற்று மாநகர சபையின் முன்முயற்சியின் கீழ், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அக்கரைப்பற்று பொதுச் சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைத் துப்புரவு செய்து, புதுப்பிக்கும் பணி நேற்று (ஜூலை 26) தொடங்கியது.
மீன் சந்தை, பொதுச் சந்தை வீதி மற்றும் ஜாஸ்மின் வீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றுவதில் இந்தச் செயல்பாடு கவனம் செலுத்துகிறது. அக்கரைப்பற்று சந்தை வர்த்தகர் சங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, மாநகர முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மாநகர பிரதி முதல்வர் யு.எல். உவைஸ் இதற்கு தலைமை தாங்கி நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக, மீன் சந்தைக்குப் பின்னால் குவிந்திருந்த பெரிய குப்பைக் குவியலை அகற்றுவதில் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தீவிரமாகப் பங்கேற்றனர்.
மீன் சந்தையின் கூரை மற்றும் கழிவுகளை அகற்றும் வசதிகள் விரைவில் புதுப்பிக்கப்படும் என்றும், அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதி முதல்வர் உவைஸ் உறுதியளித்தார்.

