கண்டி மெழுகு அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் ஜனாதிபதி
கண்டி புனித தந்ததாதுக் கோயிலின் நிர்வாகத்தின் கீழ் தற்போதுள்ள புதுப்பிக்கப்பட்ட புதிய மெழுகு அருங்காட்சியகத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்று திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில் முக்கிய வரலாற்றுப் பிரமுகர்களின் 35 மெழுகு உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கண்டி கட்டிடக்கலை, பழக்கவழக்கங்கள், கைவினைப்பொருட்கள் மற்றும் அரச உணவு முறைகள் தொடர்பான கண்காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
மெழுகு உருவங்களில் முதலாம் விமலதர்மசூரிய மன்னர், குசுமாசன தேவி, மொனரவில கெப்பேட்டிப்பொல திசாவ, தேவேந்திரா முலாச்சாரி, ஆளுநர் ரொபர்ட் பிரவுன்ரிக், எஹெலப்பொல மகா அதிகாரி, குமாரிஹாமி மற்றும் அவர்களது இரு பிள்ளைகள் ஆகியோரின் உருவங்களும் அடங்கும்.
300 மில்லியன் ரூபாய் சிறப்புத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம், கண்டி இராச்சியம் தொடர்பான ஒரு முக்கிய கலாச்சார மற்றும் கல்வி மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

