
மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் உப்புக்குளம்-பள்ளிமுனை பிரதான வீதியில் அமைந்துள்ள இரண்டு உணவகங்களுக்கு
இன்றைய தினம் (9.04) திடீரென்று சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் அங்கு சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன் போது அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் கடமையாற்றியவர்கள், சுகாதார பரிசோதனைச் சான்றிதழ் பெற்றுக் கொள்ளாமல் கடமையாற்றியமை,குளிர்சாதனப் பெட்டியில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்களை சேகரித்து வைத்தமை, உணவுப் பொருட்களை சுகாதாரம் இன்றி பாதுகாப்பற்ற முறையில் தயாரித்தமை உள்ளிட்ட சில குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டதோடு,உடனடியாக குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள மற்றைய உணவகத்தில் சோதனையிட்டபோது, அங்கு
சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தல்,உரிய முறையில் கழிவு நீர் வடிகான் பராமரிக்கப்படாமை,கழிவுநீர்த் தொட்டியில் நுளம்பு பெருகும் வகையில் வைத்திருந்தமை உள்ளடங்களாக பாரிய சுகாதார சீர் கேடுகளுடன் குறித்த உணவகம் இயங்கி வந்தமை தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த உணவகத்தை உடனடியாகத் தற்காலிகமாக சீல் வைத்து மூடிய சுகாதார அதிகாரிகள், குறித்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராகவும் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எதிர் வரும் பண்டிகைக் காலத்தையொட்டி மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள உணவகங்களில் தொடர்ச்சியாகத் திடீர் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, சுகாதார நலன் கருதி மக்கள் விழிப்பூட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.