இனி கைபேசிகளில் அலறப்போகும் “கடத்தல் எச்சரிக்கை”

இனி கைபேசிகளில் அலறப்போகும் “கடத்தல் எச்சரிக்கை”: பிரான்ஸ் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

குழந்தை கடத்தல்களைத் தடுப்பதற்கும், மாயமான சிறுவர்களை விரைவாகக் கண்டுபிடிப்பதற்கும் பிரான்ஸ் அரசாங்கம் ஒரு புதிய மற்றும் நவீன தொழில்நுட்பப் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது.

 

“Alerte enlèvement” எனும் குழந்தை கடத்தல் தடுப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று (மார்ச் 12, 2026) நீதி அமைச்சரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஜெரால்ட் தர்மானன் (Gérald Darmanin) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இதுவரை வானிலை அனர்த்தங்கள் அல்லது பயங்கரவாத அச்சுறுத்தல்களின் போது மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த “FR-Alert” எனும் நவீன எச்சரிக்கை அறிவிப்பு முறை இனிமேல் குழந்தை கடத்தல்களின் போதும் பயன்படுத்தப்படும்.

 

ஒரு பகுதியில் குழந்தை கடத்தப்பட்டால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள அத்தனை கைபேசிகளுக்கும் தானாகவே ஒரு விசேட சத்தத்துடன் கூடிய அறிவிப்பு (Push Notification) வந்து சேரும்.

 

உங்கள் கைபேசி இணையத்துடன் (Internet) இணைக்கப்படாவிட்டாலும் அல்லது தூக்க நிலையில் (Sleep mode) இருந்தாலும் இந்த எச்சரிக்கை மணி ஒலிக்கும்.

 

கடத்தல் நடந்த இடத்தைச் சூழவுள்ள தொலைத்தொடர்பு கோபுரங்களின் வரம்பிற்குள் நுழையும் எவரும் இந்தத் தகவலைப் பெற்றுக்கொள்வார்கள்.

 

தற்போது வானொலி, தொலைக்காட்சி மற்றும் நெடுஞ்சாலைப் பலகைகள் மூலம் கடத்தல் தகவல்கள் பகிரப்படுகின்றன. இருப்பினும், இந்த புதிய FR-Alert முறையினால் சுமார் 75% ஸ்மார்ட்போன் பாவனையாளர்களை நேரடியாகச் சென்றடைய முடியும் என அரசாங்கம் நம்புகிறது.

 

இதன் மூலம் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கவும், கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கத் தேவையான சாட்சியங்களை விரைவாகத் திரட்டவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

“ஒவ்வொரு வினாடியும் ஒரு குழந்தையின் உயிரைக் காக்க மிக முக்கியமானது. இந்த நவீன தொழில்நுட்பம் மக்களின் ஒத்துழைப்பைத் துரிதப்படுத்தும்” என அரசாங்கக் குறிப்புத் தெரிவிக்கிறது.

Recommended For You

About the Author: admin