இலங்கை வரும் இந்திய பிரதமரிடம் அனைத்து தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களும் ஏகோபித்த குரலில் சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்- வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு

“இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு, மீளபெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகார பகிர்விற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டி இந்திய பிரதமர் மோடியிடம் வலியுறுத்த வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரி யுள்ளது.

குறித்த கோரிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

அனைத்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைமைத்துவங்களிடமும் அக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் பகிரங்கமாக முன்வைக்கும் கோரிக்கையாவது,
இதுவரை காலமும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.

இதற்கு பிரதான காரணம் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்வு குறித்த ஏகோபித்த உடன்பாடு காணப்படாமையும் ஜக்கியமின்மையுமே ஆகும்.

இந்நிலையில் தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் இந்திய பிரதமரை நேரடியாக சந்திப்பதற்கு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே நிரந்தரமான தீர்வாக அமையுமென தமிழ் பேசும் மக்கள் அனைவரும் வலியுறுத்துகின்றார்கள்.

இலங்கையின் தேசிய பிரச்சினைக்கான தீர்வில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதனை மறுதலிக்கமுடியாது. எனவே தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் அனைவரும் ஏகோபித்த குரலில்  ஒரே கோரிக்கையை முன்வைக்க வேண்டுமென   வலியுறுத்துகின்றோம்.

இதுவே, தமிழ்த் தேசிய அரசியல் தலைமைகள் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு செய்கின்ற அரசியல் கடமையாகும்.

எனவே “இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த இந்திய அரசு உயரிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” என்று அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்  என்பதாகும்.

இந்தியப் பிரதமரின் வருகையை  முன்னிட்டு குறித்த கோரிக்கை மனுவை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்  தூதுவரிடம் கையளித்திருந்த நிலையில்,

இன்றைய தினம் அதன் பிரதிகளை அனைத்துத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும்  வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு சமர்ப்பித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ROHINI ROHINI