சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது!
சொகுசு வாகனங்களை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த காலங்களில் ஜனாதிபதி ஒருவருக்கான பாதுகாப்புக்காக 7 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தமோ, பாரிய அச்சுறுத்தலோ இல்லாத நிலையில் அவ்வாறான பாதுகாப்பு தேவையில்லை.
“அநாவசிய செலவுகளை குறைப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு திருத்தப்பட்டதே தவிர, அதில் எந்த பழிவாங்கல் நோக்கமும் இல்லை.
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம வீதியில் உள்ள விசாலாமான இல்லத்தில் 2 பேரே வசித்து வருகின்றனர். எனவேதான் அவர்களுக்கு பொருத்தமான வீடொன்றை தருகின்றேன் ,அங்கிருந்து வெளியேற வேண்டும் என கூறுகிறேன்.
அத்துடன், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், புதிய சொகுசு வாகனங்களை சட்டவிரோதமான முறையில் விடுத்து பலர் பயன்படுத்தியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகளாவர். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் லொஹான் ரத்தவத்த போன்றவர்களின் சட்டவிரோத வாகனங்கள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டன.
“தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, இன்னும் சில நாட்களில் மேலும் ஓரிருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்படக்கூடும்” என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கம் இலங்கையில் 76 வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.